செய்திகள்
தங்கப் பதக்கத்துடன் நீரஜ் சோப்ரா

டோக்கியோவில் வரலாறு படைத்த நீரஜ் சோப்ரா... ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

Published On 2021-08-07 13:13 GMT   |   Update On 2021-08-07 13:13 GMT
நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் நீண்டகால காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளதாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லி:

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஒலிம்பிக்கில் 13 ஆண்டுகளுக்குப் பின்னர் தனி நபர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது. இந்த வெற்றியை நாடே கொண்டாடி வருகிறது.  தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளன.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘நீரஜ் சோப்ராவின் வரலாறு காணாத வெற்றி இது. உங்கள் தங்கப்பதக்கம் தடைகளை தகர்த்து வரலாற்று படைத்துள்ளது. தாங்கள் பங்கேற்ற முதல் ஒலிம்பிக்கில், இந்தியாவிற்கு முதல் தடகளப் பதக்கத்தை கொண்டு வந்தீர்கள். உங்கள் சாதனை நமது இளம் தலைமுறையினரை ஊக்குவிக்கும். நாடே மகிழ்ச்சியடைகிறது! மனமார்ந்த வாழ்த்துக்கள்!’ என கூறி உள்ளார்.



டோக்கியோவில் வரலாறு படைக்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.  

‘இன்று நீரஜ் சோப்ரா சாதித்தது என்றென்றும் நினைவில் இருக்கும். இளம் வீரர் நீரஜ் மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவர் ஆர்வத்துடன் விளையாடி, ஈடு இணையற்ற திறமையைக் காட்டியிருக்கிறார். தங்கம் வென்ற அவருக்கு வாழ்த்துக்கள்!’ என மோடி டுவீட் செய்துள்ளார்.

நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் நீண்ட கால காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளதாக  துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு குறிப்பிட்டுள்ளார். அவரது அசாதாரண வெற்றியானது, சக இந்தியர்களின் இதயங்களில் எல்லையற்ற மகிழ்ச்சியையும் பெருமையையும் நிரப்புவதாகவும் துணை ஜனாதிபதி கூறி உள்ளார்.
Tags:    

Similar News