செய்திகள்
வெண்கல பதக்கத்துடன் பிவி சிந்து

இந்தியாவின் பெருமை சிந்து - ஜனாதிபதி, பிரதமர் புகழாரம்

Published On 2021-08-01 19:48 GMT   |   Update On 2021-08-01 19:48 GMT
ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி. சிந்துவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
புதுடெல்லி:

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் சீனாவின் ஹி பிங்யாஜிவோவை இந்திய வீராங்கனை பி.வி. சிந்து எதிர்கொண்டார். இந்த போட்டியில் பி.வி. சிந்து 21-13, 21-15 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று வெண்கல பதக்கம் வென்றார். 

இதன்மூலம் 2 ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பி.வி. சிந்து பெற்றுள்ளார். இதற்கு முன் 2016 ரியோ ஒலிம்பிக்கில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். இதையடுத்து, பி.வி. சிந்து இந்திய ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்.

இந்நிலையில், ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பிவி சிந்துவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில், “2 ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை பி.வி. சிந்து பெற்றுள்ளார். அவர் நிலைத்தன்மை, அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பான செயல்பாட்டிற்கு ஒரு புதிய அளவுகோலை அமைத்துள்ளார். இந்தியாவிற்கு பெருமை சேர்த்த அவளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.



பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “பி.வி. சிந்துவின் மிகச்சிறந்த செயல்பாட்டால் நம் அனைவருக்கும் மகிழ்ச்சி. டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றதற்காக அவருக்கு வாழ்த்துகள். அவர் இந்தியாவின் பெருமை மற்றும் மிகச்சிறந்த ஒலிம்பிக் வீராங்கனைகளில் ஒருவர்” என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், “இந்தியாவிற்காக 2-வது பதக்கத்தை வென்றுள்ள பி.வி. சிந்துவுக்கு வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனது டுவிட்டரில், “தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் பேட்மிண்டனில் வெண்கலம் வென்றுள்ள சிந்துவுக்கு வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள். எதிர்காலத்தில் அவர் மேலும் பல பதக்கங்களை நாட்டிற்காகப் பெற வாழ்த்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “விடாமுயற்சி, உழைப்பு, தன்னம்பிக்கை எனும் ஆயுதங்களால், தனக்கான வெற்றிப் பாதையை தானே உருவாக்கி ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்று இந்திய திருநாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள பெருமைக்குரிய அன்பு சகோதரி பி.வி. சிந்துவுக்கு எனது வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.

மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பி.வி. சிந்துவுக்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
Tags:    

Similar News