செய்திகள்
நீதிபதியை நோக்கி செல்லும் ஆட்டோ

ஜார்க்கண்ட் நீதிபதி மரணத்தில் விலகாத மர்மம் -அதிர்ச்சி தரும் சிசிடிவி ஆதாரம்

Published On 2021-07-29 15:59 GMT   |   Update On 2021-07-29 15:59 GMT
விபத்து என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தன்பாத்:

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்ட கூடுதல் நீதிபதி உத்தம் ஆனந்த், நேற்று அதிகாலை நடைபயிற்சி மேற்கொண்டபோது அவர் மீது ஆட்டோ மோதியது. மோதிய ஆட்டோ நிற்காமல் சென்றுவிட்டது. ஆட்டோ மோதியதால் பலத்த காயமடைந்த நீதிபதி ரத்த வெள்ளத்தில் துடித்தார். அந்த வழியாக வந்த ஒருவர் நீதிபதியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி நீதிபதி உயிரிழந்தார்.

இது சாலை விபத்து என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அந்த வீடியோவில், சாலையோரம் நடந்து சென்ற நீதிபதி மீது ஆட்டோ வேண்டுமென்றே மோதுவது வெளிப்படையாக தெரிகிறது. எனவே, இது திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பின்னணி குறித்து விசாரணை நடைபெறுகிறது.

தன்பாத் நகரில் பல்வேறு மாபியா கொலைகள் தொடர்பான வழக்குகளை நீதிபதி ஆனந்த் விசாரித்து வந்தார். சமீபத்தில் 2 ரவுடிகளின் ஜாமீன் மனுக்களை நிராகரித்துள்ளார். எம்எல்ஏ சஞ்சீவ் சிங்கின் நெருங்கிய உதவியாளர் ரஞ்சய் சிங் கொலை வழக்கும் அவரது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை கொலை வழக்காக மாற்ற காவல்துறை மிகவும் தாமதம் செய்ததாக நீதிபதியின் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம், காவல்துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்து. உச்ச நீதிமன்றத்திலும் இந்த வழக்கு  குறித்து பார் அசோசியேசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது இந்த வழக்கு பற்றி  ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் பேசியதாகவும், வழக்கை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தலைமை நீதிபதி ரமணா கூறினார்.
Tags:    

Similar News