செய்திகள்
கொரோனா வைரஸ்

தினமும் 20 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு- கேரளாவில் ஊரடங்கு அறிவிப்பு

Published On 2021-07-29 06:13 GMT   |   Update On 2021-07-29 10:43 GMT
கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
திருவனந்தபுரம்:

உலகை உலுக்கிய கொரோனா தொற்று இந்தியாவில் முதன் முதலாக கேரளாவில்தான் கண்டறியப்பட்டது.

கேரளாவில் இருந்து சீனாவுக்கு மருத்துவம் பயிலச் சென்ற மாணவி கொரோனா தொற்றுக்கு ஆளானார். அவரை தொடர்ந்து பிற மாநிலங்களிலும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

கொரோனாவின் முதல் அலையை கட்டுப்படுத்திய கேரளா, இப்போது உருவாகி உள்ள 2-வது அலையை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.

கொரோனாவின் 2-வது அலை தாக்கம் நாட்டின் பிற மாநிலங்களில் கட்டுக்குள் வந்த நிலையில் கேரளாவில் மட்டும் இன்னும் பாதிப்பு குறையவில்லை. கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியே உள்ளது.

ஒட்டுமொத்த இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நேற்று 43,509 ஆக இருந்தது. இதில் கேரளாவில் மட்டும் 22,056 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் நாட்டில் கொரோனா பாதிப்பு சதவிகிதத்தில் 50 சதவீதத்தை தாண்டி உள்ளது.



கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வில் பல்வேறு கட்டுப்பாடுகளை மீண்டும் அறிவித்துள்ளது.

மேலும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இறப்பு மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளில் 20-க்கும் குறைவான நபர்களே பங்கேற்க வேண்டுமென்று அறிவித்துள்ளது.

இதற்கிடையே கேரளாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், அதற்கு மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கவும் மத்திய அரசு 6 பேர் கொண்ட குழுவை கேரளாவிற்கு அனுப்பி உள்ளது.

இக்குழுவினர் கேரளாவில் தொற்று பரவலுக்கான காரணம் குறித்து ஆராய்ந்து அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பார்கள். மேலும் மாநில அரசு இதுவரை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்ய உள்ளனர்.

கேரளாவில் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக கேரளாவிற்கு மட்டும் 9.73 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணாஜார்ஜ் தெரிவித்தார்.

இதில் 8,97,870 டோஸ் கோவிஷீல்டும், 74,720 டோஸ் கோவேக்சினும் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார். அனைவருக்கும் தடுப்பூசி போடவும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் இதன் மூலம் கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என்றும் சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News