செய்திகள்
மம்தா பானர்ஜி

வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வைத் தோற்கடிக்க மம்தா கூறும் யோசனை

Published On 2021-07-28 16:49 GMT   |   Update On 2021-07-28 16:49 GMT
எதிர்க்கட்சிகள் வலிமையாக அமைந்தால் வரலாறு படைக்கலாம், 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு அதுவே நம்பிக்கையாகும் என மம்தா பானர்ஜி கூறினார்.
புதுடெல்லி:

டெல்லியில் முகாமிட்டுள்ள மேற்கு வங்காள முதல் மந்திரி  மம்தா பானர்ஜி, இன்று காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார். சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில், பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்புக்குப் பின்னர் மம்தா பானர்ஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சோனியா காந்தி  என்னை தேநீர் விருந்துக்கு  அழைத்தார், ராகுல் காந்தியும் உடன் இருந்தார். நாங்கள் பொதுவான அரசியல் நிலைமை, பெகாசஸ் மற்றும் கொரோனா நிலைமை குறித்து விவாதித்தோம். மேலும் எதிர்ப்பின் ஒற்றுமை குறித்தும் விவாதித்தோம். இது ஒரு நல்ல சந்திப்பு. எதிர்காலத்தில் நேர்மறையான முடிவு வெளிவர வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.



எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைப்பை சோனியா காந்தி விரும்புகிறார்; மாநில கட்சிகளை காங்கிரஸ் நம்புகிறது, மாநில கட்சிகளும் காங்கிரசை நம்புகிறது.

பா.ஜ.க.வலிமையான கட்சியாக உள்ளது; எதிர்க்கட்சிகள் வலிமையாக அமைந்தால் வரலாறு படைக்கலாம், 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு அதுவே நம்பிக்கை.

நரேந்திர மோடி 2019இல் பிரபலமாக இருந்தார். இன்று, அவர்கள் கொரோனா உயிரிழப்புகள் பற்றிய பதிவுகளை வைத்திருக்கவில்லை, அவர்களின்  இறுதி கடைசி சடங்குகள் மறுக்கப்பட்டன, உடல்கள் கங்கை நதியில் வீசப்பட்டன. அன்புக்குரியவர்களை இழந்தவர்கள்  அதை மறந்து மன்னிக்க மாட்டார்கள்.

எனது செல்போன் ஏற்கனவே ஒட்டுகேட்கப்பட்டது.  பெகாசஸ் அனைவரின் உயிரையும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. பெகாசஸ் உளவு விவாகரத்திற்கு  அரசு ஏன் பதிலளிக்கவில்லை? மக்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். பாராளுமன்றத்தில் கொள்கை முடிவுகள் எடுக்கப்படாவிட்டால், அங்கு விவாதங்கள் நடத்தப்படாவிட்டால், அது எங்கே நடக்கும்? விவாதங்கள் தேநீர் கடைகளில் நடத்தப்படுவதில்லை, இது பாராளுமன்றத்தில் தான் நடைபெறும்.

வரும் பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வைத் தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைவது அவசியம். தனியாக, நான் ஒன்றுமில்லை. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News