செய்திகள்
கர்நாடகா புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பசவராஜ் பொம்மை

7 மாநிலங்களில் முதல்-மந்திரி பதவி வகிக்கும் வாரிசுகள்

Published On 2021-07-28 06:29 GMT   |   Update On 2021-07-28 06:29 GMT
உத்தரபிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ் முதல்- மந்திரியாக இருந்த நிலையில் பின்னர் அவரது மகன் அகிலேஷ் யாதவ் முதல்- மந்திரி பதவி வகித்தார்.
கர்நாடக முதல்-மந்திரி ஆகியுள்ள பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எஸ்.ஆர். பொம்மையின் மகன் ஆவார்.

இவரையும் சேர்த்து இந்தியாவில் தற்போது 7 மாநிலங்களில் ஏற்கனவே முதல்-மந்திரியாக இருந்தவர்களின் மகன்கள் முதல்- மந்திரியாக இருந்து வருகிறார்கள்.


அந்த வகையில் தமிழ்நாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் முதல்- அமைச்சராக இருந்து வருகிறார்.

ஆந்திராவில் முன்னாள் முதல்-மந்திரி ராஜசேகர ரெட்டியின் மகன், ஜெகன்மோகன் ரெட்டி முதல்-மந்திரியாக உள்ளார்.

ஒடிசாவில் முன்னாள் முதல்-மந்திரி பிஜு பட்நாயக்கின் மகன், நவீன் பட்நாயக் தற்போது முதல்-மந்திரியாக இருக்கிறார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முன்னாள் முதல்-மந்திரி சிபுசோரனின் மகன் ஹேமந்த் சோரன் தற்போது முதல்-மந்திரியாக உள்ளார்.

அருணாச்சல பிரதேசத்தில் முன்னாள் முதல்-மந்திரி டோர்ஜி காண்டுவின் மகன் பெமா காண்டு முதல்-மந்திரியாக இருக்கிறார்.

மேகாலயாவில் முன்னாள் முதல்-மந்திரி பி.ஏ.சங்மாவின் மகன் கொன்ராட் சங்மா முதல்- மந்திரியாக இருக்கிறார்.

காஷ்மீர் மாநிலத்தில் தாத்தா, தந்தை, மகன் என 3 தலைமுறை வாரிசுகள் முதல்- மந்திரியாக இருந்துள்ளனர். அங்கு முதலாவதாக ஷேக் அப்துல்லா முதல்- மந்திரியாக இருந்தார். அடுத்து அவரது மகன் பரூக் அப்துல்லா முதல்-மந்திரியானார். அவரைத் தொடர்ந்து அவரது மகன் உமர் அப்துல்லா முதல்- மந்திரியாக இருந்தார்.

உத்தரபிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ் முதல்- மந்திரியாக இருந்த நிலையில் பின்னர் அவரது மகன் அகிலேஷ் யாதவ் முதல்- மந்திரி பதவி வகித்தார்.

பிரிக்கப்படாத உத்தரபிரதேச மாநிலத்தில் எச்.என்.பகுகுனா முதல்-மந்திரியாக இருந்த நிலையில் அவரது மகன் விஜய் பகுகுனா உத்தரகாண்டில் முதல்-மந்திரியாக இருந்தார்.

அரியானாவில் முதல்-மந்திரியாக இருந்த தேவி லாலின் மகன் ஓம் பிரகாஷ் சவுதாலா முதல்-மந்திரியாக இருந்துள்ளார்.

மகாராஷ்டிராவில் எஸ்.பி. சவான் அவரது மகன் அசோக் சவான் ஆகியோர் முதல்-மந்திரியாக இருந்துள்ளனர்.

காஷ்மீரில் முப்தி முகமது சையீத், அவரது மகள் மெகபூபா முப்தி ஆகியோர் முதல்-மந்திரியாக இருந்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். முதல்-மந்திரியாக இருந்து மறைந்ததையடுத்து அவரது மனைவி ஜானகி முதல்- மந்திரி பதவியில் இருந்தார்.

இதேபோல பீகார் மாநிலத்தில் லாலு பிரசாத் முதல்-மந்திரியாக இருந்ததற்கு பிறகு அவரது மனைவி ராப்ரிதேவி முதல்-மந்திரி பதவிக்கு வந்தார்.

சில மாநிலங்களில் தந்தை முதல்-மந்திரியாக இருக்க மகன் துணை முதல்-மந்திரியாக பதவி வகித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த போது அவரது மகன் மு.க.ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக இருந்தார்.

பஞ்சாபில் பிரகாஷ் சிங் பாதல் முதல்-மந்திரியாக இருந்த போது அவரது மகன் சுக்பிர் சிங் துணை முதல்- மந்திரியாக இருந்தார்.

ஆந்திராவில் என்.டி.ராமராவ் முதல்-மந்திரியாக இருந்ததற்கு பிறகு அவரது மருமகன் சந்திரபாபு நாயுடு அந்த பதவிக்கு வந்தார்.

Tags:    

Similar News