செய்திகள்
ஷில்பா ஷெட்டி கணவர் ராஜ்குந்த்ரா

5 மாதத்தில் ரூ.1.17 கோடி சம்பாதித்த நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர்

Published On 2021-07-28 02:06 GMT   |   Update On 2021-07-28 02:06 GMT
ஆபாச பட வழக்கில் கைதான நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா சிறையில் அடைக்கப்பட்டார். இவர் ஆபாச படம் மூலம் 5 மாதத்தில் மட்டும் ரூ.1 கோடியே 17 லட்சம் சம்பாதித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மும்பை

மும்பை போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் மலாடு மத் ஐலேண்ட் பகுதியில் சொகுசு பங்களாவில் ஆபாச படம் எடுத்த கும்பலை பிடித்தனர். மேலும் துணை நடிகைகள் உள்பட 5-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து இருந்தனர்.

இந்தநிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் ஆபாச பட கும்பலுக்கும், பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. தொழில் அதிபரான ராஜ்குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்து, செல்போன் செயலியில் வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரின் கடந்த 19-ந்தேதி அதிரடியாக கைது செய்யப்பட்டார். ஆபாச பட வழக்கில் இவர் முக்கிய குற்றவாளி என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். போலீஸ் காவல் முடிந்ததை அடுத்து, ராஜ்குந்தரா நேற்று மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். போலீசார் அவரை மீண்டும் தங்களது காவலில் ஒப்படைக்க வேண்டும் என்று கோர்ட்டில் முறையிட்டனர்.

அப்போது போலீசார் கோர்ட்டில் ராஜ்குந்த்ரா பற்றி பரபரப்பு தகவல்களை கூறியதாவது:-

வழக்கில் கைதான ரியான் தோர்பே உள்ளிட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆபாச படம் தயாரித்து வெளியிட்டதில் ஆன்லைன் தளமான ‘ஹாட்ஸ் ஷாட்’ மூலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை 5 மாதத்தில் மட்டும்
ராஜ்குந்த்ரா
ரூ.1 கோடியே 17 லட்சம் சம்பாதித்து உள்ளார். அவர் இன்னும் அதிக பணம் சம்பாதித்திருக்கலாம். இது தொடர்பாக விசாரித்து வருகிறோம். ராஜ்குந்த்ரா அலுவலகத்தில் இருந்து 9 கோப்புகளை கைப்பற்றி உள்ளோம். அதனை ஆய்வு செய்ய வேண்டியது உள்ளது.

ஆபாச படத்தில் நடித்த பெண் ஒருவர் ராஜ்குந்த்ராவுக்கு எதிராக வாக்குமூலம் அளித்து உள்ளார். மேலும் பலர் அவருக்கு எதிராக போலீசை அணுக வாய்ப்பு உள்ளது.

மேலும் விசாரணையின் போது ராஜ்குந்த்ரா 119 ஆபாச படங்களை 12 லட்சம் அமெரிக்க டாலருக்கு (சுமார் ரூ.9 கோடி) விற்பனை செய்ய இருந்தது தெரியவந்தது.

எனவே இன்னும் ஆழமாக விசாரிக்க மீண்டும் அவரை தங்களது காவலில் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

ஆனால் ஏற்கனவே ஒரு தடவை போலீஸ் காவல் நீட்டிக்கப்பட்ட நிலையில் மீண்டும் போலீஸ் காவலில் ஒப்படைக்க முடியாது என்று கூறி போலீஸ் கோரிக்கையை ஏற்க மாஸ்திரேட்டு மறுத்துவிட்டார்.

இதையடுத்து கோர்ட்டு அவரை 14 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. அதன்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில் ராஜ்குந்த்ரா தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை ஓரிரு நாளில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தனது கைது நடவடிக்கையை எதிர்த்து ராஜ்குந்த்ரா மும்பை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அவருக்கு உடனடியாக நிவாரணம் வழங்க மறுத்துவிட்டனர்.
Tags:    

Similar News