செய்திகள்
முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை தேர்வு

கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை தேர்வு

Published On 2021-07-27 16:13 GMT   |   Update On 2021-07-27 16:13 GMT
கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களுர்:

கர்நாடக முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். கர்நாடகத்தில் பாஜக அரசு பதவியேற்று நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், எடியூரப்பா அம்மாநில கவர்னரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து அடுத்த முதல்-மந்திரியை தேர்வு செய்ய பாஜக மேலிட பார்வையாளர்களாக அனுப்பிவைக்கப்பட்ட மத்திய மந்திரிகளான தர்மேந்திர பிரதான் மற்றும் கிஷன் ரெட்டி ஆகியோர் அம்மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கர்நாடகாவின் அடுத்த முதல்-மந்திரியாக மீண்டும் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவரை பா.ஜ.க நியமிக்க வாய்ப்புள்ளது என்று கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்திருந்த நிலையில், லிங்காயத் சமூகத்தை சேர்ந்த எம்.எல்.ஏ வான தற்போதைய கர்நாடக உள்துறை மந்திரி பசவராஜ் பொம்மை முதல்-மந்திரி பதவிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவரது தந்தை எஸ்.ஆர்.பொம்மை கர்நாடக முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ளார். 2008ஆம் ஆண்டு முதல் பசவராஜ் பொம்மை பாஜகவில் பணியாற்றி வருகிறார்.
Tags:    

Similar News