செய்திகள்
மம்தா பானர்ஜி

டெல்லி சென்றார் மம்தா- 2024 தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியா?

Published On 2021-07-26 10:05 GMT   |   Update On 2021-07-26 10:26 GMT
டெல்லியில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாவை மம்தா பானர்ஜி சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தின் முதல்-மந்திரி மம்தா பொறுப்பேற்ற பிறகு இன்று முதல் முறையாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அவரின் டெல்லி பயணத்தின் நோக்கமானது, வரும் 2024 பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிக்காகவே இருக்கும் என சொல்லப்படுகிறது. ஜூலை 28 ஆம் தேதி திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜியின் இல்லத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் தேநீர்  விருந்தை மம்தா நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக 21 ஆம் தேதி காங்கிரசின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோரிடம் மம்தா காணொளி மூலம் உரையாற்றினார். அந்த உரையில், பா.ஜ.க.வை மக்கள் மன்னிப்பதாக இல்லை, நாமும் நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளைக் கடந்து பா.ஜ.க.வுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் திமுகவின் திருச்சி சிவா, சிவசேனாவின் பிரியங்கா, சமாஜ்வாடி கட்சியின் ராம் கோபால் யாதவ் மற்றும் ஜெயா பச்சன், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் மற்றும் அகாலிதளத்தின் பால்விந்தர் சிங் பந்தர் ஆகியோர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.


டெல்லிக்கு சென்ற முதல்-மந்திரி மம்தா, அங்கு சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாவையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் முதல்-மந்திரியாக பொறுப்பேற்ற பிறகு பிரதமரை முதன் முறையாக சந்திக்கிறார். அப்போது, மாநிலத்தின் வளர்ச்சிக்கான தேவைகளைப் பற்றி அவர் மோடியிடம் பேசலாம் எனத் தெரிகிறது.

மம்தாவின் டெல்லி பயணத்தைப் பற்றி பாஜகவின் திலிப் கோஷ் கூறுகையில், '2019 ஆம் ஆண்டின்போது இதைப் போன்று டெல்லிக்குப் பயணம் சென்றவர்தான் மம்தா. அதனால் அப்போது என்ன நடந்தது என்பதை நாம் கண்டோம். மீண்டும் அதுவே நடக்கும். அவர் தன் அரசை சரிவர நடத்த முடியாமல் பிரதமரைச் சந்தித்து உதவிகோர சென்றுள்ளார்' என்றார்.


Tags:    

Similar News