செய்திகள்
பிரதமர் மோடி

பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

Published On 2021-07-26 06:59 GMT   |   Update On 2021-07-26 08:14 GMT
சசிகலாவின் உதவி இல்லாமலேயே அ.தி.மு.க. 66 இடங்களில் வெற்றிபெற்றுள்ள நிலையில் சசிகலா அ.தி.மு.க.வை கைப்பற்ற நினைப்பதை எடப்பாடி பழனிசாமி கடுமையாக எதிர்க்கிறார்.
புதுடெல்லி:

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் சேர்ந்து வழிநடத்தி வருகிறார்கள்.

பொதுச்செயலாளர் பதவி அகற்றப்பட்டு ஒருங்கிணைப்புக்குழு ஏற்படுத்தப்பட்டது. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் உள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 66 இடங்களில் வெற்றிபெற்று பிரதான எதிர்க்கட்சியாக அமர்ந்தது. இந்த நிலையில் அ.தி.மு.க.வை மீண்டும் கைப்பற்றப் போவதாக சசிகலா பேசி வருவது சர்ச்சையை உருவாக்கி வருகிறது.

இதுதவிர அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடக்கும் சோதனை, உள்ளாட்சி தேர்தல் ஆகியவை அ.தி.மு.க.வுக்கு கடும் சவாலாக எழுந்துள்ளன. இந்த பிரச்சனைகளை கையாள்வதில் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் இடையே ஒருமித்த கருத்து உருவாகவில்லை என்று தெரிய வந்துள்ளது.

இத்தகைய அரசியல் சூழ்நிலையில் நேற்று காலை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அதுபோல அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் நேற்று இரவு கோவையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

டெல்லியில் நேற்று இரவு அவர்கள் இருவரும் தமிழக அரசு இல்லத்தில் தங்கினார்கள்.

டெல்லியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், எம்.பி.யுமான ரவீந்திரநாத்துக்கு பங்களாவை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. அந்த பங்களாவில் குடியேறுவதற்காக இன்று காலை 9 மணிக்கு ரவீந்திரநாத் எம்.பி. பால்காய்ச்சும் விழா நடத்தினார்.

இதில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், தங்கமணி, வேலுமணி, தளவாய் சுந்தரம் மற்றும் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். சுமார் 30 நிமிடங்கள் அ.தி.மு.க. தலைவர்கள் அங்கிருந்தனர். அதன்பிறகு அவர்கள் அனைவரும் பாராளுமன்றத்துக்கு புறப்பட்டு சென்றனர்.



பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் மோடியின் அறையில் அவரை எடப்பாடி பழனிசாமி, ஓபன்னீர்செல்வம் சந்தித்து பேசினார்கள். அப்போது, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் குறித்தும், நடப்பு அரசியல் சூழ்நிலை குறித்தும் விவாதித்தனர்.

மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க. இடம்பெறுவது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான லஞ்ச ஒழிப்பு துறை சோதனை ஆகிய விவகாரங்கள் பற்றியும் பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஆலோசித்ததாக தெரிகிறது.

தமிழகத்தில் பாராளுமன்ற மேல்-சபைக்கான 3 இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் இருந்து மத்திய மந்திரி ஆகி இருக்கும் எல்.முருகன் அடுத்த 6 மாதங்களுக்குள் எம்.பி.ஆக வேண்டும். இது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

பிரதமருடனான சந்திப்பில் சசிகலா விவகாரம் தான் முக்கிய இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது. சசிகலாவின் உதவி இல்லாமலேயே அ.தி.மு.க. 66 இடங்களில் வெற்றிபெற்றுள்ள நிலையில் சசிகலா அ.தி.மு.க.வை கைப்பற்ற நினைப்பதை எடப்பாடி பழனிசாமி கடுமையாக எதிர்க்கிறார்.

எந்த காரணத்தை கொண்டும் அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்க்கக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி மற்ற தலைவர்களிடம் கூறி வருகிறார். ஆனால் இந்த விசயத்தில் ஓ.பன்னீர் செல்வம் மாறுபட்ட கருத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது.



அ.தி.மு.க.வில் சசிகலாவை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்துவதாக தெரிய வந்துள்ளது. சசிகலாவுக்கு தமிழகத்தில் 5 சதவீத வாக்குகள் இருப்பதாகவும் எனவே அவரை இணைத்துக் கொண்டால் உள்ளாட்சி தேர்தலிலும், அடுத்து வரும் தேர்தல்களிலும் அ.தி.மு.க. பலம் பொருந்தியதாக இருக்கும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

சசிகலா விவகாரத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படாததால் தொடர்ந்து அ.தி.மு.க.வில் சர்ச்சை நீடித்து வருகிறது.

இதற்கிடையே பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுத்தனர். காவிரியின் குறுக்கே கட்டப்படும் மேகதாது அணை பிரச்சனை, நீட் தேர்வு ரத்து விவகாரம், தடுப்பூசி தட்டுப்பாடு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தாமதம் ஆகியவை குறித்து மனுக்களில் வலியுறுத்தப்பட்டு இருந்தது.

பிரதமரை 11.05 முதல் 11.30 மணிவரை அ.தி.மு.க. தலைவர்கள் சந்தித்து உரையாடியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பிரதமரை சந்தித்து பேசிய பிறகு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவையும், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அ.தி.மு.க. தலைவர்கள் சந்தித்து பேசுகிறார்கள். பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள் நிர்மலா சீத்தாராமன், நிதின் கட்காரி ஆகியோரையும் இன்று சந்திக்கும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

உட்கட்சி தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகளையும் அ.தி.மு.க. தலைவர்கள் இன்று பிற்பகல் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News