செய்திகள்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

22-வது ஆண்டு வெற்றி விழா: கார்கில் போர் நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அஞ்சலி

Published On 2021-07-26 06:10 GMT   |   Update On 2021-07-26 09:16 GMT
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் காஷ்மீர் மற்றும் லடாக்கில் 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக நேற்று மாலை அவர் ஸ்ரீநகர் சென்றடைந்தார்.
ஸ்ரீநகர்:

1999-ம் ஆண்டு நடந்த கார்கில் போரில் பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்தது. இதன் 22-வது வெற்றி விழா இன்று கொண்டாடப்பட்டது.

கார்கில் போர் நினைவுச் சின்னம் கார்கிலில் உள்ள டராஸ்சில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு போரில் உயிர் இழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

கார்கில் போரில் 559 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள். அதை நினைவூட்டும் வகையில் நினைவுச்சின்னத்தில் 559 விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டு இருந்தன.


முதலாவதாக இன்று காலை முப்படை தளபதி பிபின்ராவத் கார்கில் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

அதை தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஸ்ரீநகரில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக டராஸ் சென்றார். அவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் கார்கில் வெற்றிவிழா அங்கு நடத்தப்படுகிறது. அதில் ராணுவ தளபதிகள், அதிகாரிகள், போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினர் பங்கேற்கின்றனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் காஷ்மீர் மற்றும் லடாக்கில் 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக நேற்று மாலை அவர் ஸ்ரீநகர் சென்றடைந்தார்.

விமான நிலையத்தில் அவரை மனோஜ் சின்கா மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். நேற்று கவர்னர் மாளிகையில் தங்கினார். ஜனாதிபதி வருகையையொட்டி காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

நாளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் காஷ்மீர் பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

எல்லைப்பகுதியான பாரமுல்லாவுக்கு சென்று பாதுகாப்பு பணிகளை பார்வையிடும் திட்டமும் உள்ளது. பாதுகாப்பு கருதி ஜனாதிபதி சுற்றுப்பயண விவரங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை. 28-ந் தேதி வரை காஷ்மீரில் இருக்கும் அவர் பின்னர் டெல்லி திரும்புகிறார்.


Tags:    

Similar News