செய்திகள்
கவிதா மலோத்

ஓட்டு போட லஞ்சம்- தெலுங்கானா பெண் எம்பிக்கு 6 மாதம் சிறைத்தண்டனை

Published On 2021-07-25 11:05 GMT   |   Update On 2021-07-25 12:10 GMT
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிரான குற்றவியல் வழக்குகளை விசாரிப்பதற்காக 2018ம் ஆண்டு மார்ச் மாதம் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
ஐதராபாத்:

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக தெலுங்கானா மாநிலம் மஹ்புதாபாத் தொகுதியின் எம்பி கவிதா மலோத் (தெலுங்கானா ராஷ்டிர சமிதி) மீது வழக்கு தொடரப்பட்டது. எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்றது.

வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. எம்பி கவிதா மலோத் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கும் அவரது உதவியாளர் சவுகத் அலிக்கும் தல 6 மாத சிறைத்தண்டனை மற்றும் 10000 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேசமயம் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்காக அவர்களுக்கு ஜாமீன் வழங்கி உள்ளது. கவிதா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிரான குற்றவியல் வழக்குகளை விசாரிப்பதற்காக 2018ம் ஆண்டு மார்ச் மாதம் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. போலீஸ் அதிகாரியை தாக்கிய வழக்கில் பாஜக எம்எல்ஏ ராஜா சிங் மற்றும் அரசு அதிகாரியை தாக்குவதற்கு உதவியாளரை தூண்டிய வழக்கில் டிஆர்எஸ் எம்எல்ஏ தனம் நாகேந்தர் ஆகியோருக்கு இந்த சிறப்பு நீதிமன்றம் தண்டனை வழங்கி உள்ளது.

Tags:    

Similar News