செய்திகள்
உச்ச நீதிமன்றம்

வாகனத்தை வாடகைக்கு எடுத்தவருக்கு காப்பீட்டு நிறுவனமே இழப்பீடு வழங்க வேண்டும் -உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Published On 2021-07-22 13:43 GMT   |   Update On 2021-07-22 13:43 GMT
வாகனத்தை உரிமையாளர் வாடகைக்கு விட்டிருந்தாலும், வாடகைக்கு எடுத்தவர்தான் அந்தக் குறிப்பிட்ட காலத்துக்கு உரிமையாளர், அவருக்கே காப்பீட்டு உரிமமும் பொருந்தும் என உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.
புதுடெல்லி:

1998ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச போக்குவரத்துக் கழகம் சார்பில் ஒரு பேருந்து வாடகைக்கு எடுக்கப்பட்டு விபத்தில் சிக்கியது.

விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தார் மோட்டார் விபத்து தீர்ப்பாயத்தில் முறையிட்டு இழப்பீடு கோரினர். விபத்தில் உயிரிழந்தவருக்கு இழப்பீடாக 1.82 லட்சம் ரூபாய் வழங்கும்படி தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

ஆனால், காப்பீட்டு நிறுவனம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதில், “போக்குவரத்துக் கழகம் பேருந்தை வாடகைக்கு எடுத்துள்ளது. விபத்து நடந்தபோது, பேருந்து போக்குவரத்துக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. விபத்து நடந்தால் இழப்பீடு தர வேண்டும் என்று பேருந்தின் உண்மையான, பதிவு செய்யப்பட்ட உரிமையாளருக்கும், காப்பீட்டு நிறுவனத்துக்கும்தான் ஒப்பந்தம் இருக்கிறதே தவிர, வாடகைக்கு எடுத்த போக்குவரத்துக் கழகத்துடன் ஒப்பந்தம் செய்யவில்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட அலகாபாத் உயர் நீதிமன்றம், இழப்பீடு தருவதில் இருந்து காப்பீட்டு நிறுவனத்துக்கு விலக்கு அளித்தது. ஆனால் போக்குவரத்துக் கழகம் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து, தீர்ப்பாயத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த கோரியது.

இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.அப்துல் நசீர், கிருஷ்ணா முராரி அமர்வில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. “வாகனத்தை உரிமையாளர் வாடகைக்கு விட்டிருந்தாலும், வாடகைக்கு எடுத்தவர்தான் அந்தக் குறிப்பிட்ட காலத்துக்கு உரிமையாளர். அவருக்கே காப்பீட்டு உரிமமும் பொருந்தும். வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர் விபத்து ஏற்படுத்தினால்தான், மூன்றாம் நபருக்கான இழப்பீடு தர முடியும்.

 வாடகைக்கு எடுத்தவர் விபத்து ஏற்படுத்தினால் இழப்பீடு தர முடியாது என்று காப்பீட்டு நிறுவனம் மறுக்க முடியாது. காப்பீடு தருவதிலிருந்து தப்பித்துச் செல்லவும் முடியாது. வாகனத்தை வாடகைக்கு எடுத்த நேரத்திலிருந்து திருப்பி ஒப்படைக்கும் காலம்வரை அந்த வாகனமும், காப்பீடும் வாடகைக்கு எடுத்தவருக்குச் சொந்தம், அவர்தான் அதற்கு உரிமையாளர். ஆதலால், வாடகைதாரர் விபத்து ஏற்படுத்தினாலும், மூன்றாம் நபருக்கான இழப்பீட்டைக் காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும். தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
Tags:    

Similar News