செய்திகள்
கர்நாடக முதல்வர் எடியூரப்பா

கர்நாடகாவில் கல்லூரிகள், தியேட்டர்களை திறக்க அனுமதி -அரசு அறிவிப்பு

Published On 2021-07-18 13:15 GMT   |   Update On 2021-07-18 13:15 GMT
கல்வி நிறுவனங்களுக்கு வரும் அனைவரும் குறைந்தது ஒரு தவணையாவது தடுப்பூசி போட்டிருக்கவேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.
பெங்களூர்:

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். அப்போது, கொரோனா தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை வழங்க முடிவு செய்யப்பட்டது. 

அதன்பின்னர் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் தொடர்பாக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, சினிமா தியேட்டர்கள், மல்டிபிளக்ஸ்களை திறக்கலாம். 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே ரசிகர்களை அனுமதிக்க வேண்டும். இதேபோல் ஆடிட்டோரியங்கள் போன்ற பொது நிகழ்வு நடைபெறும் இடங்களிலும் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

ஜூலை 19 முதல் இரவு நேர ஊரடங்கில் ஒருமணி நேரத்தைக் குறைத்துள்ளது. அதாவது இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமலில் இருக்கும்.



இதேபோல் ஜூலை 26ம் தேதி முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்ற உயர் கல்வி நிறுவனங்களை திறக்கலாம். கல்வி நிறுவனங்களுக்கு வரும் அனைவரும் குறைந்தது ஒரு தவணையாவது தடுப்பூசி போட்டிருக்கவேண்டும். விருப்பப்படும் மாணவர்கள் நேரடி வகுப்பில் பங்கேற்கலாம்.

நீண்ட கால தொழில்நுட்ப படிப்புகள் உட்பட அனைத்து திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் இன்று 1869 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 42 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News