செய்திகள்
பிரதமர் மோடி

தமிழகம் உள்ளிட்ட 6 மாநில முதல்-மந்திரிகளுடன் மோடி பேசுகிறார்

Published On 2021-07-14 02:04 GMT   |   Update On 2021-07-14 02:04 GMT
கொரோனா வைரஸ் தொற்று பரவலில் கவலைக்குரியதாக காணப்படுகிற 8 வடகிழக்கு மாநிலங்களின் முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி நேற்று காணொலிக்காட்சி வழியாக கலந்துரையாடினார்.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலைக்கு எதிராக நாடு தீவிரமாக போராடிக்கொண்டிருக்கிறது. கொரோனா தினசரி பரவல், உயிரிழப்புகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு அளவை விட தொற்றில் இருந்து மீள்வோர் எண்ணிக்கை அதிகமாக இருந்து வருகிறது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

இதெல்லாம், கொரோனாவின் 2-வது அலையை இந்தியா வீழ்த்தும் நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலில் கவலைக்குரியதாக காணப்படுகிற 8 வடகிழக்கு மாநிலங்களின் முதல்-மந்திரிகளுடன் 
பிரதமர் மோடி
 நேற்று காணொலிக்காட்சி வழியாக கலந்துரையாடினார். அப்போது அவர் மலைவாழிடங்கள், சந்தைகள் போன்றவற்றில் முககவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியை பின்பற்றாமலும் மக்கள் கூட்டம் கூடுவது குறித்து கவலை தெரிவித்தார்.

இந்த நிலையில் கொரோனா தொற்று பரவலாக அதிகரித்துள்ள மாவட்டங்களைக் கொண்டுள்ள அல்லது மற்ற மாநிலங்களில் இருப்பதைப்போல தொற்று பரவலில் சரிவை சந்திக்காத மாநிலங்களின் முதல்-மந்திரிகளுடன் அவர் உரையாட விரும்புகிறார்.

அந்த வகையில் தமிழகம் உள்ளிட்ட 6 மாநில முதல்-மந்திரிகளுடன் மோடி காணொலிக்காட்சி வழியாக 16-ந்தேதி (நாளை மறுதினம்) கலந்துரையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிற 5 மாநில முதல்-மந்திரிகளான ஜெகன்மோகன் ரெட்டி (ஆந்திரா), எடியூரப்பா (கர்நாடகம்), நவீன் பட்நாயக் (ஒடிசா), உத்தவ் தாக்கரே (மராட்டியம்), பினராயி விஜயன் (கேரளா) ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். 

Tags:    

Similar News