செய்திகள்
சோனியா காந்தி

காங்கிரசில் அடுத்த ஆண்டு வரை சோனியாவே தலைவர்- மல்லிகார்ஜூன கார்கே தகவல்

Published On 2021-07-13 06:56 GMT   |   Update On 2021-07-13 06:56 GMT
பாராளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளை தெளிவாகவும், உறுதிப்படவும் முன்வைக்கக்கூடிய நபரை காங்கிரஸ் குழு தலைவராக நியமிக்க கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளது.
புதுடெல்லி:

கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததையொட்டி அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அவரை மூத்த தலைவர்கள் சமாதானம் செய்தும் ஏற்கவில்லை. ராகுல் தனது ராஜினாமா முடிவில் உறுதியாக இருந்தார்.

இதையடுத்து சோனியா காந்தி காங்கிரஸ் கட்சி இடைக்கால தலைவராக பொறுப்பேற்றார். அவர் கட்சி பணிகளை கவனித்து வருகிறார்.



மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வரும் ராகுல் காந்தியை மீண்டும் கட்சி தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அவர் இன்னும் செவி சாய்க்கவில்லை.

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. புதிய தலைவர் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் விவாதித்து தேர்ந்தெடுக்கப்படுவார்.

இந்த காரிய கமிட்டி கூட்டம் அடுத்த ஆண்டுதான் நடைபெறும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி இடைக்கால தலைவராக சோனியாகாந்தி அடுத்த ஆண்டு வரை நீடிப்பார் என்று மூத்த தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

புதிய தலைவரை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் கட்சி கொரோனா தொற்று முடியும் வரை காத்திருக்கும். அடுத்த தலைவர் காரிய கமிட்டி கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்த கூட்டம் அடுத்த ஆண்டு நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே பாராளுமன்ற காங்கிரஸ் குழுவுக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். தற்போது பாராளுமன்ற காங்கிரஸ் குழு தலைவராக உள்ள அதேரஞ்சன் சவுத்ரிக்கு பதிலாக புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாராளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளை தெளிவாகவும், உறுதிப்படவும் முன்வைக்கக்கூடிய நபரை காங்கிரஸ் குழு தலைவராக நியமிக்க கட்சி மேலிடம் திட்டமிட்டு இருப்பதாகவும் அப்பதவிக்கு சசிதரூர், மணீஷ்திவாரி, கவுகவ்கோகாய், ரவினீத் பிட்டு ஆகியோரின் பெயர்களை பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சோனியாகாந்தி தலைமையில் நாளை காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் நடக்கிறது. இதில் பாராளுமன்ற குழுவுக்கு புதிய தலைவர் நியமனம் குறித்த அறிவிப்பை சோனியாகாந்தி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags:    

Similar News