செய்திகள்
மம்தா பானர்ஜி

மத்திய மந்திரிசபை மாற்றம் மக்களின் துயரங்களுக்கு முடிவுகட்டுமா? மம்தா பானர்ஜி கேள்வி

Published On 2021-07-08 12:37 GMT   |   Update On 2021-07-08 12:37 GMT
எரிபொருள் விலை தினமும் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறது என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

கொல்கத்தா:

மத்திய மந்திரி சபை மாற்றி அமைக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்படுவது தொடர்பாக மேற்குவங்காள் முதல்-மந்திரி மம்தாபானர்ஜி கொல்கத்தாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

மத்திய மந்திரி சபையில் இருந்து பாபுல் சுப்ரியோ நீக்கப்பட்டு இருப்பது வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ஆட்சி அமைக்க முடியாது என்பதை பா.ஜனதா உணர்ந்து கொண்டதை உணர்த்துகிறது.

மேற்கு வங்காள கவர்னர் ஜகதீப் தன்கரை கவர்னர் பதவியில் இருந்து நீக்குவது உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பிரதமருக்கு நான் பலமுறை கடிதம் எழுதியுள்ளேன். ஆனால் எந்த பதிலும் இதுவரை வரவில்லை. எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நாடு முழுவதும் பொருளாதாரம் முழுமையான அளவில் மந்தமாக உள்ளது. எரிபொருள் விலை தினமும் அதிகரித்து வருகிறது. ஆனாலும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறது.

நமது பிரதமர் மனதின் குரலில் (மன் கி பாத்) மட்டுமே மும்முரமாக இருக்கிறார். அதற்குபதிலாக பெட்ரோலின் குரல் (பெட்ரோல் கி பாத்), டீசலின் குரல் (டீசல் கி பாத்), தடுப்பூசியின் குரல் (வேக்சின் கி பாத்) என்று வைத்திருக்கலாம்.

வடக்கு வங்காளத்துக்கு தனியூனியன் பிரதேச அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரிய சில வாரங்களிலேயே பா.ஜனதா எம்.பி. ஜான் பர்லாவுக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது. இது பா.ஜனதாவின் மக்களை பிளவுபடுத்தும் மனநிலையையே பிரதிபலிக்கிறது.

ஆனாலும் மத்திய மந்திரி சபை மறுசீரமைப்பு குறித்து நான் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டேன். மத்திய மந்திரிசபை மாற்றம் மக்களின் துயரங்களுக்கு முடிவு கட்டுமா?

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News