செய்திகள்
கோப்புப்படம்

ஜி.எஸ்.டி.யால் வரிவிகிதம் குறைவு- வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகம் : மத்திய அரசு பெருமிதம்

Published On 2021-06-30 18:45 GMT   |   Update On 2021-06-30 18:45 GMT
ஜி.எஸ்.டி.யால் சாதாரண மக்கள் செலுத்த வேண்டிய வரிச்சுமை குறைந்துள்ளது. இதில் வரிவிகிதம் குறைவு என்பதால், வரி செலுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
புதுடெல்லி:

ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு வந்தது. சேவை வரி, உற்பத்தி வரி, மதிப்பு கூட்டு வரி உள்பட 17 வகையான மறைமுக வரிகளை ஒருங்கிணைத்து இந்த வரி கொண்டுவரப்பட்டது.

ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்து நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்தன. இதையொட்டி, மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-



ஜி.எஸ்.டி.யில் அத்தியாவசிய பொருட்களுக்கு வரி விலக்கோ அல்லது மிகக்குறைவான 5 சதவீத வரியோ விதிக்கப்படுகிறது. 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என மொத்தம் 4 அடுக்கு வரிநடைமுறை பின்பற்றப்படுகிறது. அதற்கு முன்பு அமலில் இருந்த வரிகளை கூட்டினால், மொத்தம் 31 சதவீத வரி வரும்.

எனவே, ஜி.எஸ்.டி.யால் சாதாரண மக்கள் செலுத்த வேண்டிய வரிச்சுமை குறைந்துள்ளது. இதில் வரிவிகிதம் குறைவு என்பதால், வரி செலுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

வரி செலுத்துவோர் 1 கோடியே 30 லட்சம்பேர் பதிவு செய்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளில் 66 கோடிக்கு மேற்பட்ட ஜி.எஸ்.டி. கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஜி.எஸ்.டி. என்பது எளிமையான, வெளிப்படையான வரிநடைமுறை ஆகும். சாதாரண மக்கள், வரி செலுத்துவோர் என இருவருக்குமே சாதகமானது.

இது அமலுக்கு வருவதற்கு முன்பு, ஒரு கம்பெனி ஒவ்வொரு மாநிலத்திலும் வர்த்தகம் செய்வதாக இருந்தால், 495 தடவை ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டி இருந்தது. ஆனால், தற்போது வெறும் 12 தடவை தாக்கல் செய்தால் போதும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News