செய்திகள்
டிகே சிவக்குமார், சித்தராமையா

முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையாவுடன் போட்டி போடும் டி.கே.சிவக்குமார்

Published On 2021-06-30 03:38 GMT   |   Update On 2021-06-30 03:38 GMT
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் மந்திரி பதவிக்கே போராடிய நிலையில் முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையாவுடன் டி.கே.சிவக்குமார் போட்டி போட்டு வருகிறார்.
பெங்களூரு :

கர்நாடக காங்கிரஸ் தலைவராக ஆர்.வி.தேஷ்பாண்டே இருந்த போது கட்சியின் செயல் தலைவராக டி.கே.சிவக்குமார் பணியாற்றினார். அவர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை பலப்படுத்தும் பணிகளை மேற்கொண்டார். அதற்கு முன்பு அதாவது 1990-ம் ஆண்டு பங்காரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது, டி.கே.சிவக்குமார் மந்திரியாக பதவி ஏற்றார். அவர் சிறைத்துறை மந்திரியாக செயலாற்றினார். 2 ஆண்டுகள் மந்திரி பதவியை அவர் வகித்தார்.

அதன் பிறகு 1999-2004-ம் ஆண்டில் எஸ்.எம்.கிருஷ்ணா முதல்-மந்திரியாக இருந்தபோது, அவரது மந்திரிசபையில் நகர வளர்ச்சித்துறை மந்திரியாக பணியாற்றினார். அதன் பிறகு கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
சித்தராமையா
முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அப்போது ஊழல் புகார்கள் காரணமாக டி.கே.சிவக்குமாருக்கு மந்திரி பதவி நிராகரிக்கப்பட்டது. ஆனால் அவர் அமைதியாக இருக்கவில்லை.

மந்திரி பதவியை பெற காங்கிரஸ் மேலிடத்திடம் போராடினார். இறுதியில் அக்கட்சியின் மேலிடத்தின் அனுமதியுடன் சித்தராமையாயா ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டுக்கு பிறகு அதாவது 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் மந்திரியாக டி.கே.சிவக்குமார் நியமிக்கப்பட்டார். மின்துறை மந்திரியாக அவர் பணியாற்றினார். சித்தராமையா ஆட்சி காலம் முடிவடையும் வரை அவர் மந்திரி பதவியில் நீடித்தார்.

அதன் பிறகு கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து குமாரசாமி தலைமையில் ஆட்சி அமைத்தன. அந்த கூட்டணி ஆட்சியில் டி.கே.சிவக்குமார் மிக முக்கியமான நீர்ப்பாசனத்துறை மந்திரியாக பணியாற்றினார். 14 மாதங்களில் அந்த கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. அதன் பிறக 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் மாநில தலைவர் பதவியை தினேஷ் குண்டுராவ் ராஜினாமா செய்தார்.

இதையடுத்து தலைவர் பதவியை கைப்பற்ற டி.கே.சிவக்குமார்
தீவிர முயற்சி மேற்கொண்டார். 3 மாதங்கள் புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. கர்நாடகத்தில் வீரசைவ-லிங்காயத் சமூகத்திற்கு அடுத்த இடத்தில் உள்ள ஒக்கலிக சமூகத்தை சேர்ந்த டி.கே.சிவக்குமாருக்கு கட்சி தலைவர் பதவி வழங்க சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்தார். அவர் மீது நிலுவையில் இருக்கும் ஊழல் புகார்கள் மற்றும் அனைவரையும் அரவணைத்து செல்லும் தன்மை இல்லை என்று சித்தராமையா காரணங்களை கூறினார். டி.கே.சிவக்குமார் தலைவராக நியமிக்கப்பட்டால், தான் மீண்டும் முதல்-மந்திரி ஆவதில் சிக்கல் ஏற்படும் என்று உணர்ந்து சித்தராமையா
எதிர்ப்பு தெரிவித்தார். ஆனாலும் டி.கே.சிவக்குமார் தீவிர முயற்சி மேற்கொண்டதின் விளைவாக அவருக்கு மாநில காங்கிரஸ் தலைவர் பதவி கிடைத்தது. ஆனால் அவரை கட்டிப்போடும் நோக்கத்தில் இதுவரை இல்லாத வகையில் முதலில் 3 செயல் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். அதன் பிறகு மேலும் 2 செயல் தலைவர்கள் என மொத்தம் 5 செயல் தலைவர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் கர்நாடக சட்டசபைக்கு இன்னும் சுமார் 2 ஆண்டுகள் உள்ளன. இதற்கிடையே பெலகாவி மக்களவை தொகுதிக்கும், மஸ்கி, பசவகல்யாண் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் மஸ்கி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

மேலும் பா.ஜனதாவின் கோட்டையான பெலகாவி மக்களவை தொகுதியில் அக்கட்சி வெறும் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அந்த தொகுதியை பா.ஜனதா கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இடைத்தேர்தல் முடிவுகள் காங்கிரசாருக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் அடிப்படையில் பார்த்தால் அடுத்து நடைபெறும் சட்டசபை தேர்தலில் எப்படியும் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்ற அக்கட்சி தலைவர்கள் கருதுகிறார்கள். மேலும் கர்நாடக பா.ஜனதாவில் எடியூரப்பாவை மாற்றுவது குறித்து தொடர்ந்து குழப்பமான தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்துவதாக உள்ளது.

ஒருவேளை எடியூரப்பாவை முன்னிறுத்த அடுத்த சட்டசபை தேர்தலை பா.ஜனதா சந்திக்காவிட்டால், அதனால் அக்கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். சட்டசபை தேர்தல் நடைபெறும்போது எடியூரப்பாவுக்கு 80 வயதாகிவிடும் என்பதால், அவரது தலைமையில் சட்டசபை தேர்தலை சந்திக்கும் மனநிலையில் பா.ஜனதா மேலிடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகத்தில் தற்போது காங்கிரசுக்கு சாதகமான சூழல் நிலவி வரும் நிலையில், சட்டசபை தேர்தலில் அக்கட்சி வெற்றி பெற்றால் சித்தராமையா முதல்-மந்திரி ஆக வேண்டும் என்று அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் குரல் எழுப்ப தொடங்கியுள்ளனர். இது முதல்-மந்திரி பதவியில் அமர வேண்டும் என்று கனவில் இருக்கும்
டி.கே.சிவக்குமா
ருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அடுத்த முதல்-மந்திரி யார் என்பது குறித்து எம்.எல்.ஏ.க்கள் யாரும் கருத்து தெரிவிக்கக்கூடாது என்று டி.கே.சிவக்குமார் உத்தரவிட்டார். இதை சித்தராமையா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பொருட்படுத்தவில்லை. இதையடுத்து டெல்லிக்கு சென்ற டி.கே.சிவக்குமார் அங்கு ராகுல் காந்தியை நேரில் சந்தித்து சித்தராமையா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் குறித்து புகார் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் அடுத்த முதல்-மந்திரி யாா் என்பது குறித்து கருத்து கூறக்கூடாது என்று காங்கிரஸ் மேலிடம் கட்டளையிட்டது. அதன் பிறகு அடுத்த முதல்-மந்திரி விவகாரம் சற்று அடங்கியுள்ளது.

சித்தராமையா ஆட்சியில் மந்திரி பதவியை பெற டி.கே.சிவக்குமார் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் இப்போது முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையாவுடன் டி.கே.சிவக்குமார் போட்டி போடுகிறார். இந்த விவகாரம் இத்துடன் நிறைவு பெறாது. காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்-மந்திரி பதவியை விட்டுக்கொடுக்கும் மனநிலையில் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவருமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே மூத்த தலைவர்கள் பரமேஸ்வர், பி.கே.ஹரிபிரசாத், கே.எச்.முனியப்பா ஆகியோர் ரகசிய ஆலோசனை நடத்தி சித்தராமையா, டி.கே.சிவக்குமாருக்கு அடுத்தபடியாக 3-வது அணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். ஆக மொத்தம் அடுத்த முதல்-மந்திரி யார் என்ற விவகாரம் காங்கிரஸ் மேலிடத்திற்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News