செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

நாடு முழுவதும் ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை ஜூலை 31ந்தேதிக்குள் அமல்படுத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Published On 2021-06-29 08:16 GMT   |   Update On 2021-06-29 08:16 GMT
மத்திய அரசே இடம் பெயர் தொழிலாளர்களுக்காக தனி இணையத்தளத்தை உருவாக்கி அதில் தொழிலாளர்களை பதிவு செய்ய வேண்டும்.
புதுடெல்லி:

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் மத்திய அரசு மானிய விலையில் மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது.
 
தற்போது ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான ரேஷன் கார்டுகள் நடைமுறையில் உள்ளன. இவற்றை மாற்றி ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

இதை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்த வற்புறுத்தப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கார்டு இருந்தால் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.



கொரோனா காரணமாக மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயர்ந்த மக்கள் உணவுப் பொருட்கள் கிடைக்காமல் தவித்தனர். அவர்களுக்கு இது உதவியாக இருக்கும்.

இந்த நிலையில் இடம் பெயரும் தொழிலாளர்களுக்கு உணவு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் சமூக சேவகர்கள் அஞ்சலி பரத் வாஜ், ஹர்ஸ்மந்தர், ஜெகதீப்ஜோக்கர் ஆகியோர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்குகளை ஒன்றாகி சுப்ரீம் கோர்ட்டு விசாரணை நடத்தி வந்தது.


நீதிபதிகள் அசோக் பூஷண், எம்.ஆர்.ஷா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-

அனைத்து மாநிலங்களும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்த முன்வர வேண்டும். ஜூலை 31-ந்தேதிக்குள் இந்த திட்டம் அமலுக்கு வர வேண்டும். அதற்கு முன்னதாக இடம் பெயர் தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாநிலங்களும் உணவுப் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும். அந்த தொழிலாளர்களுக்கான உணவுப் பொருட்களை
மத்திய அரசு
மாநிலங்களுக்கு உரிய அளவில் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

மத்திய அரசே இடம் பெயர் தொழிலாளர்களுக்காக தனி இணையத்தளத்தை உருவாக்கி அதில் தொழிலாளர்களை பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்தவர்களுக்கு உணவுப் பொருட்கள் கிடைப்பதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

மேலும் கொரோனா பிரச்சினை முடிவுக்கு வரும்வரை இடம் பெயர் தொழிலாளர்களுக்கு அந்தந்த மாநிலங்கள் சமுதாய சமையல் கூடங்கள் ஏற்படுத்தி உணவு தயாரித்து வழங்க வேண்டும்.


Tags:    

Similar News