செய்திகள்
கோப்புப்படம்

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படுகிறது - மத்திய அரசு

Published On 2021-06-24 22:59 GMT   |   Update On 2021-06-24 22:59 GMT
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படுவதாக மத்திய அரசு உறுதிபட தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி:

நாடு முழுவதும் பயனாளிகளுக்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. இதன் காரணமாக தடுப்பூசி திட்ட பணிகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒதுக்கப்படும் தடுப்பூசி எண்ணிக்கையில் மத்திய அரசு வெளிப்படைத்தன்மையை பின்பற்றவில்லை என ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்த தகவல்களை மத்திய அரசு நேற்று மறுத்து உள்ளது. இது தொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் தேசிய கொரோனா தடுப்பூசி திட்டம், அறிவியல் மற்றும் தொற்றுநோயியல் சான்றுகள், உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் உலகளாவிய சிறந்த நடைமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மக்களின் திறமையான பங்கேற்பின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.



இத்தகைய சிறப்புடன் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒதுக்கப்படும் தடுப்பூசிகள் விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படுவது இல்லை என சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

ஆனால் இந்த தகவல்கள் அனைத்தும் முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றவை மற்றும் தவறான தகவல்கள் ஆகும்.

ஏனெனில் மாநிலங்களின் மக்கள் தொகை, நோயாளிகள் எண்ணிக்கை, பயன்பாட்டு செயல்திறன் மற்றும் வீணாகும் காரணிகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் மிகுந்த வெளிப்படைத்தன்மையுடனே தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

அது மட்டுமின்றி மத்திய அரசின் தடுப்பூசி வழங்கல், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நுகர்வு, அவற்றுடன் கிடைக்கும் இருப்பு மற்றும் பயன்படுத்தப்படாத தடுப்பூசி அளவுகள், அடுத்தடுத்து வழங்கப்படும் தடுப்பூசி எண்ணிக்கை பற்றிய தகவல்கள் ஊடக செய்திக்குறிப்பு மூலமாகவும், வேறு வழியாகவும் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

இவ்வாறு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
Tags:    

Similar News