செய்திகள்
கோப்புபடம்

5 மாநிலங்களில் 40 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா - பீதியடைய வேண்டாம் என்று அரசு வேண்டுகோள்

Published On 2021-06-24 12:05 GMT   |   Update On 2021-06-24 12:05 GMT
டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பரவுவதில் அதிவேகம் கொண்டது என்றும் இதன் மூலம்தான் இந்தியாவில் மூன்றாவது அலை ஏற்படும் என்றும் மராட்டிய மருத்துவ நிபுணர்கள் குழு சமீபத்தில் எச்சரித்திருந்தது.

புதுடெல்லி:

சீனாவில் 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வருகிறது.

இந்தியாவில் கண்டறியப்பட்ட ‘பி.1.617.2’ வைரசுக்கு டெல்டா என்று உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டியது. இந்த வைரஸ் தான் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலைக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்று கூறப்படுகிறது.

மேலும், உலக சுகாதார அமைப்பு டெல்டா கொரோனா வைரசை கவலையளிக்கக் கூடிய வைரசாக வகைப்படுத்தியது. தற்போது இந்த வைரஸ் உருமாறியதையடுத்து, டெல்டா பிளஸ் என அழைக்கப்படுகிறது.

இந்த வகை வைரஸ் பரவுவதில் அதிவேகம் கொண்டது என்றும் இதன் மூலம்தான் இந்தியாவில் மூன்றாவது அலை ஏற்படும் என்றும் மராட்டிய மருத்துவ நிபுணர்கள் குழு சமீபத்தில் எச்சரித்திருந்தது.

இந்தியாவில் டெல்டா பிளஸ் வகை கொரோனாவால் தற்போதுவரை 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மராட்டியம், கேரளா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் அங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசின் சுகாதார அமைச்சகம் நேற்று எச்சரிக்கை விடுத்தது.

கேரளா, மராட்டியத்தை தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனா தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் கர்நாடகாவிலும் டெல்டா பிளஸ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 45 ஆயிரம் மாதிரிகள் எடுக்கப்பட்டு டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த வகை வைரஸ் வேகமாக பரவும் என்பதற்கோ பாதிப்பை அதிகம் ஏற்படுத்தும் என்பதற்கோ எந்தவிதமான தரவுகளும் இல்லை என்பதால் மக்கள் பீதியடைய தேவையில்லை என்று அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் டெல்டா பிளஸ் வைரஸ் தாக்குதல் கண்டறியப்பட்டது குறித்து, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

கேரளா, மராட்டியம், மத்திய பிரதேசத்தை தொடர்ந்து தமிழகத்தில் பெண் ஒருவருக்கு உருமாறிய ‘டெல்டா பிளஸ்’ கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான மக்களிடம் பல்கிப் பெருகும்போது வைரஸ் கிருமி தன்னைக் காத்துக்கொள்ள உருமாற்றம் அடையத் தொடங்கும். அவ்வாறு உருமாற்றம் அடைந்த வைரஸ்கள் ஏற்கனவே உள்ள வைரசை காட்டிலும் வீரியமிக்கதாகவும், அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். அந்த வகையில் கொரோனா முதல் அலையில் இந்தியா முழுவதும் ‘ஆல்பா’ வகை கொரோனா வைரஸ் காணப்பட்டது.

நாளடைவில் அது உருமாற்றம் அடைந்து வீரியமானது. இந்தியாவில் உருமாற்றம் அடைந்த அந்த வைரசை ‘டெல்டா’ வகை கொரோனா என்று உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக அதிலிருந்தும் உருமாற்றம் அடைந்த புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு ‘டெல்டா பிளஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 2வது அலை ஏற்பட்டபோது தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தன. பெரும்பாலானோருக்கு ஆக்சிஜன் அளவு திடீரென குறைந்தது. மேலும், உயிரிழப்புகளும் அதிகரித்தன.

இதையடுத்து வைரசின் மரபணுவை ஆய்வு செய்து தமிழகத்தில் எந்த வகையான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிய தமிழக பொது சுகாதாரத்துறைத் திட்டமிட்டது.

இதையடுத்து ஆய்வுக்காக குடும்பமாக கொரோனாவால் பாதிப்பட்டோர், ஒரே பகுதி அல்லது திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சியின் மூலம் கொரோனா பாதிப்புக்குள்ளானோர், இளம் வயதினர், குழந்தைகள், இணை நோய்களின்றி கொரோனாவால் உயிரிழந் தோர், தடுப்பூசி செலுத்தியும் பாதிப்புக்குள்ளானோரிடம் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.


மேலும், தமிழகம் முழுவதும் மொத்தம் 1,159 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவை கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள வைரஸ் மரபணு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. அதில் இதுவரை 772 மாதிரிகளின் முடிவுகள் வெளியாகின. அதில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு ‘டெல்டா’ வகை கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது.

மேலும் குறைந்த மாதிரிகளில் மட்டுமே ‘ஆல்பா’ வகை கொரோனா வைரஸ் காணப்பட்டது. இந்நிலையில், முடிவுகள் வெளியான 772 மாதிரிகளில் பெண் ஒருவருக்கு ‘டெல்டா பிளஸ்’ பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அவரது சளி மாதிரி அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்திலிருந்து பெறப்பட்டது.

வைரஸ்கள் தம்மை உயிர்ப்புடன் வைத்திருக்க உருமாறிக் கொண்டேதான் இருக்கும். அந்த வகையில்தான் தற்போது ‘டெல்டா’ மற்றும் ‘டெல்டா பிளஸ்’ வகை பாதிப்பு தமிழகத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் யாரும் பீதியடைய தேவையில்லை.

தடுப்பூசிகளை சரியாக செலுத்திக் கொண்ட பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று வரவில்லை. அவ்வாறு தொற்றுக்குள்ளான வெகு சிலருக்கும் கூட பாதிப்புகள் குறைவாகவே இருந்துள்ளன. ‘டெல்டா பிளஸ்’ பாதிப்புக் குள்ளான பெண் தடுப்பூசி செலுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர் முறையாக 2 தவணையும் செலுத்தினாரா என்பது குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

அதுமட்டுமல்லாமல் வெளிமாநிலங்களுக்கு அவர் பயணித்தாரா, அவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இதேபோன்ற பாதிப்பு ஏற்பட்டதா என்பன குறித்த தகவல்களும் திரட்டப்பட்டு வருகின்றன.

அவை அனைத்தும் வந்த பிறகே இந்த விவகாரத்தில் உரிய முடிவுக்கு வர இயலும். தற்போது உள்ள சூழலில் டெல்டா வகையாக இருந்தாலும் சரி, வேறு ஏதேனும் புதிய வகையாக இருந்தாலும் சரி சிகிச்சை முறைகளும், மருந்துகளும் ஒன்றுதான். தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே பாதிப்பிலிருந்து 90 சதவீதம் நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News