செய்திகள்
மருத்துவ நிபுணர் குழுவினருடன் முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசனை நடத்திய காட்சி.

மாணவர்களுக்கு தடுப்பூசி போட்ட பிறகு பள்ளி, கல்லூரிகளை திறக்கலாம்: மருத்துவ குழு பரிந்துரை

Published On 2021-06-23 02:52 GMT   |   Update On 2021-06-23 02:52 GMT
ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 3 மணி நேரம் மட்டுமே வகுப்புகளை நடத்த வேண்டும் என்றும், மாணவர்களுக்கு தடுப்பூசி போட்ட பிறகு மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளை திறக்கலாம் என்றும் முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் மருத்துவ நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்து பரிந்துரைத்துள்ளனர்.
பெங்களூரு :

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை கடந்த மே மாதம் உச்சத்தை தொட்ட பிறகு தற்போது குறைந்துள்ளது.

கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இதையடுத்து சுமார் 2 மாத ஊரடங்கிற்கு பிறகு கடந்த 14-ந் தேதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அதைத்தொடர்ந்து கடந்த 21-ந் தேதி முதல் 2-வது கட்ட தளர்வுகள் அமல்படுத்தப்பட்டன.

இதனால் மாநிலம் முழுவதும் பஸ்கள் ஓடத்தொடங்கியுள்ளன. பெங்களூருவில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. மைசூரு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் அங்கு மட்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அப்படியே முழுமையாக அமலில் உள்ளன.
கொரோனா
2-வது கட்டுக்குள் வந்துவிட்டதாக மாநில அரசு கூறியுள்ளது. கொரோனா பாதிப்பு 5 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. அதனால் கர்நாடகம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

இதற்கிடையே கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலை தொடங்கும் என்றும், அது குழந்தைகளை தீவிரமாக தாக்கும் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகள் வழங்க பிரபல இதயநோய் மருத்துவ நிபுணர் தேவிஷெட்டி தலைமையில் ஒரு நிபுணர் குழு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மாநில அரசு அமைத்தது. அதில் தொற்று நோயியல் நிபுணர்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவ நிபுணர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்த நிபுணர் குழு கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தயாரித்தது. இந்த நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பாவை பெங்களூருவில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில் தேவிஷெட்டி தலைமையிலான நிபுணர் குழுவினர் நேரில் சந்தித்து பேசினர். அப்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் அந்த குழு வழங்கியது. மேலும் அந்த குழுவினருடன் எடியூரப்பா சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை கட்டுக்குள் வந்துள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. கொரோனா 3-வது அலை தாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதனால் டாக்டர் தேவிஷெட்டி தலைமையில் ஒரு மருத்துவ நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் இன்று (நேற்று) என்னை நேரில் சந்தித்து பேசினர்.

அவர்கள், கொரோனா 3-வது அலையை தடுக்க அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை வழங்கியுள்ளனர். அதில் முக்கியமாக பள்ளி-கல்லூரிகளை படிப்படியாக திறக்க பரிந்துரை செய்துள்ளனர். 18 வயது நிரம்பிய மாணவர்களுக்கு தடுப்பூசி போட்டு கல்லூரிகளை திறக்க அவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

அதனால் 18 வயது நிரம்பிய அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும். பள்ளி குழந்தைகளுக்கும் தடுப்பூசி வழங்கிய பிறகு பள்ளிகளை திறக்க ஆலோசனை கூறியுள்ளனர். குழந்தைகள் மீது தடுப்பூசி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு அனுமதி கிடைத்ததும் குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப்படும். அதன் பிறகு படிப்படியாக பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். முதல்கட்டமாக மாணவர்களுக்கு தடுப்பூசி போட்ட பிறகு மருத்துவ, என்ஜினீயரிங், முதல் நிலை கல்லூரிகள் திறக்கப்படும். மேலும் நிபுணர் குழு கூறியுள்ள அனைத்து பரிந்துரைகளையும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தாலுகா, மாவட்ட, மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிகளில் குழந்தைகள் நல பிரிவு, தீவிர சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளை தொடங்குமாறு பரிந்துரை செய்துள்ளனர். அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள், நர்சுகள் நியமனம் செய்ய வேண்டும் என்றும், தொண்டு நிறுவனங்கள், பெரு நிறுவனங்களின் உதவிகளை பெறுமாறும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குவதில் கவனம் செலுத்தப்படும்.

அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் மனநல மருத்துவர்களை நியமிக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உணவகங்கள் திறப்பு, வணிக நிறுவனங்கள் திறப்புக்கு அனுமதி வழங்கியது சரி தான் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
கொரோனா
தடுப்பூசி வினியோகம் மேலும் தீவிரப்படுத்தப்படும். கொரோனா பாதிப்புக்கு பிறகு ஏற்படும் உடல் பாதிப்புகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

இந்த பேட்டியின்போது சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் உடன் இருந்தார்.

முன்னதாக முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் மருத்துவ நிபுணர் குழு தாக்கல் செய்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

முதல்கட்டமாக கல்லூரிகளை திறக்க வேண்டும். 2-வது கட்டமாக 8 முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க வேண்டும். 3-வது கட்டமாக 5 முதல் 7-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை திறக்க வேண்டும். ஆனால் பள்ளி-கல்லூரிகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

கர்நாடக அரசே முகக்கவசம் வழங்க வேண்டும், குழந்தைகளுக்கு வெண்ணீர் வழங்க வேண்டும், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளின் பிற ஊழியர்களுக்கு கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி போட வேண்டும். உடல் சுகாதாரமான குழந்தைகளை மட்டுமே பள்ளிகளுக்குள் அனுமதிக்க வேண்டும். பள்ளி வளாகததிற்குள் வெளியாட்களை அனுமதிக்கக்கூடாது.

வாரம் ஒரு முறை உள்ளூர் டாக்டர் மூலம் குழந்தைகளின் உடல்நிலையை பரிசோதிக்க வேண்டும். குழந்தைகளுக்கு அரசே பிரத்தியேகமாக போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். பள்ளி வளாகத்திற்குள் தின்பண்டங்கள் விற்க தடை விதிக்க வேண்டும். கொரோனா வைரஸ் குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் விளையாட்டுகளை ஆட குழந்தைகளை அனுமதிக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகளை அரசே வழங்க வேண்டும். பெற்றோர் அனுமதித்தால் மட்டுமே குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மூலமான கற்றலுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 3 மணி நேரம் மட்டுமே வகுப்புகளை நடத்த வேண்டும். 12-18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட அரசு அனுமதி அளிக்க வேண்டும். இந்த விதிமுறைகளை அரசு சரியான முறையில் பின்பற்றாவிட்டால் 3-வது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதை தடுக்க முடியாது.

கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலையில் 3.40 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு தேவையான ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும். 23 ஆயிரத்து 804 சாதாரண படுக்கைகள் குழந்தைகளுக்கு தேவைப்படும். கொரோனா சிகிச்சை மையங்களில் 43 ஆயிரம் படுக்கைகள் தேவை.

குழந்தைகள் சிகிச்சை பாதுகாப்பு மையங்களை அமைக்க வேண்டும். அதில் தாய்-குழந்தை சேர்ந்து இருக்க வசதிகளை செய்ய வேண்டும். அந்த சிகிச்சை மையங்களில் குழந்தைகள் விளையாட வசதிகளை செய்ய வேண்டும். குழந்தைகள் வீட்டு சாப்பாடு கேட்டால் அதை வழங்க வேண்டும். அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள், நர்சு பற்றாக்குறையை சரிசெய்ய வேண்டும்.

அந்த சிகிச்சை மையங்களில் ஆக்சிஜன் வசதியை ஏற்படுத்த வேண்டும். கர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசி வினியோகம் செய்யும் பணியை தீவிரப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News