செய்திகள்
நவ்னீத் ராணா

நவ்நீத் ராணா எம்.பி.யின் சாதி சான்றிதழ் ரத்துக்கு தடை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Published On 2021-06-23 02:20 GMT   |   Update On 2021-06-23 02:20 GMT
தமிழ்ப்பட நடிகையான நவ்நீத் ராணா போலி ஆவணங்களை தாக்கல் செய்து தாழ்த்தப்பட்டோருக்கான சாதி சான்றிதழை பெற்றதாக மும்பை ஐகோர்ட்டில் ஒருவர் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
புதுடெல்லி :

2019 நாடாளுமன்ற தேர்தலில் மராட்டிய மாநிலம் அமராவதி தனி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நடிகை நவ்நீத் ராணா. இவர் தமிழில் அரசாங்கம், அம்பாசமுத்திரம் அம்பானி ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். மேலும் இந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்து உள்ளார்.

இவர் போலி ஆவணங்களை தாக்கல் செய்து தாழ்த்தப்பட்டோருக்கான சாதி சான்றிதழை பெற்றதாக மும்பை ஐகோர்ட்டில் ஒருவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நவ்நீத் ராணா எம்.பி.யின் சாதி சான்றிதழை அதிரடியாக ரத்து செய்தனர். மேலும் போலியாக சாதி சான்றிதழ் பெற்ற பெண் எம்.பி.க்கு ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டனர்.

இதன் காரணமாக அவரது எம்.பி. பதவிக்கு ஆபத்து ஏற்பட்டது.

இந்தநிலையில் மும்பை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து நவ்நீத் ராணா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் வினீத் சரண், தினேஷ் மகேஷ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்தது. இதில் மனுவை விசாரித்த நீதிபதிகள், பெண் எம்.பி.யின் சாதி சான்றிதழை ரத்து செய்து மும்பை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தனர். மேலும் மனு தொடர்பாக மராட்டிய அரசு மற்றும் வழக்கில் தொடர்புடையவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு காரணமாக நவ்நீத் ராணா எம்.பி.க்கு இடைக்கால நிவாரணம் கிடைத்து உள்ளது.

Tags:    

Similar News