செய்திகள்
கோவேக்சின்

கோவேக்சினுக்கு 78 சதவீத செயல்திறன் : 3-வது கட்ட சோதனை முடிவு ஏற்பு

Published On 2021-06-22 23:46 GMT   |   Update On 2021-06-22 23:46 GMT
உலக சுகாதார அமைப்பின் அவசர பயன்பாட்டு பட்டியலில் கோவேக்சினை சேர்ப்பது தொடர்பான முதல் கட்ட கூட்டம் இன்று நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி:

முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கி, தயாரிக்கப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வரும் ஒரே தடுப்பூசி கோவேக்சின். ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம்தான் இதை உருவாக்கி பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.

இந்த தடுப்பூசியின் 3-வது கட்ட மருத்துவ பரிசோதனை, 25 ஆயிரத்து 800 பேரிடம் நடத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசியை செலுத்தி பரிசோதித்ததில், அதன்செயல் திறன் 77.8 சதவீதம் என தெரிய வந்துள்ளது.

இந்த முடிவுகள், இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்தின் ஒப்புதலுக்காக அனுப்ப வைக்கப்பட்டன. அவற்றை ஆராய்ந்த மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர்குழு ஏற்றுக்கொண்டு விட்டது. இதுதொடர்பான பரிந்துரை, இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அடுத்து இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்தின் ஒப்புதல் கிடைத்து விட்டால், உலக சுகாதார அமைப்பின் அவசர பயன்பாட்டு பட்டியலில் கோவேக்சினும் இடம் பிடித்து விடும் என தெரிகிறது.

இது தொடர்பாக ஏற்கனவே பாரத் பயோடெக் நிறுவனம், உலக சுகாதார அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளது. இதையொட்டிய 90 சதவீத ஆவணங்களை சமர்ப்பித்தும் விட்டது.

உலக சுகாதார அமைப்பின் அவசர பயன்பாட்டு பட்டியலில் கோவேக்சினை சேர்ப்பது தொடர்பான முதல் கட்ட கூட்டம் இன்று (புதன்கிழமை) நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News