செய்திகள்
உச்ச நீதிமன்றம்

12ம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரம்- ஆந்திர அரசுக்கு உச்ச நீதிமன்றம் 2 நாள் கெடு

Published On 2021-06-22 15:12 GMT   |   Update On 2021-06-22 15:12 GMT
ஒரு இறப்பு ஏற்பட்டால்கூட, நாங்கள் அரசையே பொறுப்பேற்கச் சொல்வோம் என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.
புதுடெல்லி:

நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில், மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு பெரும்பாலான மாநிலங்கள் பிளஸ்2 பொதுத்தேர்வை ரத்து செய்துவிட்டன. மத்திய கல்வி வாரியங்களும் தேர்வை  ரத்து செய்துள்ளன. 

ஆனால் ஆந்திராவில் எப்படியாவது 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வை நடத்த வேண்டும் என்பதில் அரசு தீவிரமாக உள்ளது. அதேசமயம் தேர்வுகள் தொடர்பான எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. 



இந்நிலையில் பிளஸ்2 தேர்வு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பிளஸ்2 தேர்வு தொடர்பாக முடிவு எடுக்காமல் இருக்கும் ஆந்திர அரசுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்ததுடன், இரண்டு நாட்களில் முடிவு எடுக்கும்படி உத்தரவிட்டனர். ஒரு இறப்பு ஏற்பட்டால்கூட, நாங்கள் அரசையே பொறுப்பேற்கச் சொல்வோம் என்று கூறிய நீதிபதிகள், வழக்கை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தனர். 

நேற்று நடந்த விசாரணையின்போது, ஆந்திர அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மஹபூஸ் நாஸ்கி, கொரோனா தொற்று குறைந்தபிறகு தேர்வு நடத்துவது தொடர்பாக அரசு முடிவு எடுக்கும் என்று குறிப்பிட்டார்.

ஜூன் 17ல் நடந்த விசாரணையின்போது, மாணவர்களின் எதிர்கால நலன் கருதியே தேர்வு நடத்த விரும்புவதாக கல்வி மந்திரி சுரேஷ் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News