செய்திகள்
சரத் பவார் வீட்டில் நடைபெற்ற ஆலோசனை

பாஜகவுக்கு எதிராக வலுவான அணி... சரத்பவார் வீட்டில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை

Published On 2021-06-22 14:02 GMT   |   Update On 2021-06-22 14:02 GMT
பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் வலிமையான கூட்டணியை உருவாக்குவது குறித்தும், தேர்தல் வியூகம் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
புதுடெல்லி:

2024 பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து வலிமையுடன் போராட, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஈடுபட்டுள்ளார். அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை நேற்று மீண்டும் சந்தித்து பேசியதால், இது 2024 பாராளுமன்றத் தேர்தலை ஒட்டிய திட்டமிடல் என தகவல் வெளியானது. மூன்றாவது அணி தொடர்பான முயற்சி என்றும் பரபரப்பு தகவல் வெளியானது.

அதன்பின்னர், திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் ஜா ஆகியோருடனும் சரத் பவார் ஆலோசனை நடத்தினார். 



இதன் தொடர்ச்சியாக சரத் பவார் வீட்டில் இன்று எதிர்க்கட்சிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட 8 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.பி. ஷா, முன்னாள் தூதர் கே.சி.சிங் மற்றும் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் ஆகியோரும் பங்கேற்றனர்.

முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா, இந்த கூட்டத்தை ஒருங்கிணைத்தார். இக்கூட்டத்தில் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் வலிமையான கூட்டணியை உருவாக்குவது குறித்தும், தேர்தல் வியூகம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
Tags:    

Similar News