செய்திகள்
சஞ்சய் ராவத்

மகாவிகாஸ் கூட்டணி கட்சிகள் இடையேயான உறவு பலமாக உள்ளது: சஞ்சய் ராவத்

Published On 2021-06-22 02:02 GMT   |   Update On 2021-06-22 02:03 GMT
சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் இடையே விரிசலை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள் வெற்றி பெறாது. வரும் தேர்தல்களில் 3 கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
மும்பை :

மராட்டியத்தில் கொள்கைகளில் முரண்பாடு கொண்டசிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்த மகாவிகாஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்தநிலையில் சிவசேனா எம்.எல்.ஏ. பிரதாப் சர்நாயக், சிவசேனா மீண்டும் பா.ஜனதாவுடன் கூட்டணி சேர வேண்டும் என கடிதம் எழுதியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து சிவசேனா மூத்த தலைவரான சஞ்சய் ராவத் எம்.பி. கூறியதாவது:-

சிவசேனாவில் ஒரே ஒரு பிரிவு தான். எங்கள் கட்சி இன்னும் உள்கட்சி பூசலால் பாதிக்கப்படவில்லை. எல்லா சிவசேனா தலைவர்களுடன் ஆலோசித்த பிறகு தான், காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி சேரும் முடிவு எடுக்கப்பட்டது.
சிவசேனா
தலைவர் பிரதாப் சர்நாயக் சிக்கலில் உள்ளார். அவரும், அவரது குடும்பத்தினரும் மத்திய விசாரணை முகமைகளால் துன்புறுத்தப்படுவதாக கூறியுள்ளார். எனவே அவர் பிரதமர் மோடியுடன் கூட்டணி சேர வேண்டும் என விரும்புகிறார். அது அவரின் தனிப்பட்ட கருத்து. கட்சியில் நிலைப்பாடு முடிவு செய்யப்பட்டுவிட்டது.

சர்நாயக்கின் கடின காலத்தில் கட்சி அவருடன் துணையாக நிற்கும். மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் கூட மத்திய முகமைகளால் துன்புறுத்தப்பட்டனர். ஆனால் அது மராட்டிய கலாசாரத்திற்கு ஒத்துவராது.

மகாவிகாஸ் கூட்டணி
கட்சிகள் இடையேயான உறவு பலமாக உள்ளது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் இடையே விரிசலை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள் வெற்றி பெறாது. வரும் தேர்தல்களில் 3 கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

அந்த நேரம் வரும் போது, அதுகுறித்த முடிவு எடுக்கப்படும். இந்த ஆட்சி 5 ஆண்டுகளுக்கு தொடர வேண்டும் என்பதே தற்போது 3 கட்சிகளுக்கும் இடையே உள்ள தீர்மானம் ஆகும். குறைந்தபட்ச செயல் திட்டம் தான் கூட்டணியின் உயிர்நாடி ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News