செய்திகள்
மத்திய அரசு

கொரோனாவால் பாதித்தவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவது 80 சதவீதம் குறைந்தது- மத்திய அரசு தகவல்

Published On 2021-06-19 05:51 GMT   |   Update On 2021-06-19 09:04 GMT
கொரோனா பாதிப்பில் இருந்து தடுப்பூசி, பாதுகாப்பு தருவதாக மற்ற நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பு மருந்தை செலுத்தி கொண்டால் தொற்று ஏற்பட்டாலும் பாதிப்பு குறைவாகவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தடுப்பூசி திட்டம் மூலம் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டாலும் ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெறும் நிலை 75 முதல் 80 சதவீதம் வரை குறைந்துள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து நீதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) வி.கே.பால், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் கூறியதாவது:-

தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் கூட ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவது 75 முதல் 80 சதவீதம் வரை குறைந்துள்ளது.

மருத்துவ ஆக்சிஜன் தேவையும் 8 சதவீதம் குறைந்துள்ளது. தொற்று அதிகம் பாதிக்க வாய்ப்புள்ள பிரிவினரான சுகாதார பணியாளர்கள், பாதிப்புக்குள்ளாவது குறைந்துள்ளது.

இவர்களில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்க வேண்டிய நிலை 6 சதவீதமாக உள்ளது. 94 சதவீதம் பேருக்கு பாதுகாப்பான நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் சுகாதாரப் பணியாளர்களின் உயிர்கள் காக்கப்பட்டிருக்கின்றன.

கடந்த மே 10-ந்தேதி உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 78.6 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.

கொரோனா வார பாதிப்பு ஏப்ரல் 30-ந்தேதி முதல் மே 6-ந்தேதி வரை 21.6 சதவீத அளவில் உச்சத்தில் இருந்தது. இது தற்போது 81 சதவீதம் குறைந்துள்ளது. தினசரி தொற்று பாதிப்பு 85 சதவீதம் குறைந்து இருக்கிறது.

நாடு முழுவதும் 513 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு 5 சதவீதத்துக்கு கீழ் குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து தடுப்பூசி, பாதுகாப்பு தருவதாக மற்ற நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே மக்கள் தயக்கமின்றி தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வரவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் வி.கே.பால் கூறும்போது, பள்ளிகள் திறப்பை பொறுத்தவரை பல்வேறு வி‌ஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. பள்ளிகளை திறந்த நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதை பார்க்க வேண்டியுள்ளது. எனவே கொரோனா தொற்று நம்மை பாதிக்காது என்ற நம்பிக்கை ஏற்படும் வரை மாணவர்கள் ஆசிரியர்களை இக்கட்டான சூழலில் விட முடியாது’ என்றார்.

Tags:    

Similar News