செய்திகள்
முழுஊரடங்கு

கர்நாடகம் முழுவதும் 58 மணி நேர முழுஊரடங்கு தொடங்கியது

Published On 2021-06-19 02:09 GMT   |   Update On 2021-06-19 02:09 GMT
கர்நாடகத்தில் ஓட்டல், மளிகை கடைகள், மருந்து கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. வருகிற 21-ந் தேதி முதல் கூடுதல் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
பெங்களூரு :

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை கடந்த மார்ச் முதல் தீவிரமாக பரவியது.

கடந்த மே மாதம் முதல் வாரத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டி உச்சத்தை தொட்டது. அதன் பிறகு வைரஸ் பரவலின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. உயிரிழப்பு அதிகமாக இருந்த நிலையில் அதுவும் குறைந்து வருகிறது. தற்போது மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரம் என்ற அளவில் பதிவாகி வருகிறது. இதையடுத்து கடந்த 14-ந் தேதி முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.

மளிகை கடைகள், மருந்து கடைகள், கட்டுமான பணிகளுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அனைத்து தொழில் நிறுவனங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டது. இவை அனைத்தும் செயல்பட தொடங்கியதால், தலைநகர் பெங்களூருவில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது.

நகரில் போக்குவரத்து நெரிசல் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது. மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு பின்பற்றப்படும் என்று அரசு அறிவித்தது. இந்த ஊரடங்கு தளர்வு உத்தரவு வருகிற 21-ந் தேதி வரை அமலில் இருக்கும் என்று அரசு அறிவித்தது.

கர்நாடக அரசு அறிவித்தப்படி 58 மணி நேர முழு ஊரடங்கு நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதையொட்டி பெங்களூருவில் மேம்பாலங்கள் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன. முக்கிய சாலைகளில் ஒரு வழி சாலை அடைக்கப்பட்டுள்ளது. வாகன போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் தொழில் நிறுவனங்கள் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மளிகை கடைகள், மருந்து கடைகளை திறக்கப்பட்டு இருக்கும். அதுபோல் ஓட்டல்கள் திறந்திருக்கும். உணவு பொருட்களை பார்சல் வழங்க மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மருத்துவமனைகள் வழக்கம் போல் செயல்படும். ஆம்புலன்ஸ் வாகனங்கள் தடையின்றி இயங்கும் என்று அரசு அறிவித்துள்ளது. அவசர தேவைக்காக மருத்துவமனைக்கு செல்பவர்கள் பயணம் மேற்கொள்ளலாம். அவர்களுடன் உதவிக்கு குடும்பத்தினரும் செல்லலாம் என்று அரசு கூறியுள்ளது. ஆனால் மருத்துவமனைக்கு செல்வதற்கான ஏதாவது ஒரு ஆவணத்தை போலீசாரிடம் காட்ட வேண்டும். தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் நிறுவனம் வழங்கியுள்ள அடையாள அட்டையை காட்டிவிட்டு பயணம் செய்யலாம் என்று அரசு கூறியுள்ளது.

விதிமுறைகளை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். போலீசார் நகரில் ரோந்து வந்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு உள்ளனர். இந்த 58 மணி நேர ஊரடங்கு வருகிற 21-ந் தேதி அதிகாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் 21-ந் தேதி முதல் கூடுதல் ஊரடங்கு தளர்வுகளை அறிவிக்க அரசு முடிவு செய்துள்ளது. அந்த தளர்வுகள் குறித்த விவரங்களை முதல்-மந்திரி எடியூரப்பா இன்று (சனிக்கிழமை) அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

மளிகை, பழக்கடைகள் ஏற்கனவே திறக்கப்பட்ட நிலையில் பிற அனைத்து வகையான கடைகளும் திறக்க அரசு அனுமதி அளிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் கடைகளை திறக்கும் நேரத்தையும் காலை 6 மணி முதல் மஇரவு 7 மணி வரை நீட்டிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கை மட்டும் நீட்டிக்க அரசு ஆலோசித்துள்ளது. மேலும் அரசு-தனியார் பஸ்கள், பெங்களூருவில் மெட்ரோ ரெயில்கள் முழுமையாக இயங்க அரசு அனுமதி அளிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதனால் வருகிற 21-ந் தேதிக்கு பிறகு கர்நாடகம் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்ப உள்ளது.

Tags:    

Similar News