செய்திகள்
சோனியா காந்தி - முக ஸ்டாலின்

சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

Published On 2021-06-18 05:09 GMT   |   Update On 2021-06-18 10:04 GMT
தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பிரதமர் நரேந்திர மோடியிடம், மு.க.ஸ்டாலின் வழங்கி பேசினார்.
புதுடெல்லி:

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக அரசு முறை பயணமாக நேற்று டெல்லி சென்றார்.

அவர், சென்னையில் இருந்து நேற்று காலை தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். அவருடன் அவரது மனைவி துர்காவும் உடன் சென்றார்.

டெல்லி சென்றடைந்த மு.க.ஸ்டாலினை டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்ட தி.மு.க. எம்.பி.க்கள் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

அதனைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு சென்றார். தமிழ்நாடு இல்லத்தில் அவருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.



அப்போது பிரதமர் நரேந்திரமோடியும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஒருவருக்கொருவர் பரஸ்பர வணக்கம் தெரிவித்துக் கொண்டனர். அதன்பின்னர் நரேந்திர மோடிக்கு, மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்தார். பதிலுக்கு நரேந்திர மோடியும் அவருக்கு பொன்னாடை அணிவித்து, தேர்தலில் வெற்றிபெற்று தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்துகளை தெரிவித்தார். மு.க.ஸ்டாலினும் அப்போது அவருக்கு நன்றி தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து இருவரும் சில நிமிடங்கள் பேசிக்கொண்டனர்.


அதன்பின்னர் தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பிரதமர் நரேந்திர மோடியிடம், மு.க.ஸ்டாலின் வழங்கி பேசினார். நரேந்திர மோடி- மு.க.ஸ்டாலின் இடையேயான சந்திப்பு ஏறத்தாழ 30 நிமிடங்கள் நடைபெற்றது.

இந்த சந்திப்புக்கு பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு வந்தார்.

இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து அரசியல் ரீதியாக ஆலோசனை நடத்தினார்.

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியுடன் சந்திப்பு மேற்கொண்ட பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை புறப்பட்டார்.



Tags:    

Similar News