செய்திகள்
மம்தா பானர்ஜி

கவர்னரை திரும்ப பெறுமாறு மோடிக்கு 3 முறை கடிதம் எழுதினேன் - மம்தா பானர்ஜி சொல்கிறார்

Published On 2021-06-18 01:47 GMT   |   Update On 2021-06-18 01:47 GMT
மம்தா பானர்ஜி 3-வது முறையாக ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து அங்கு நடைபெற்ற அரசியல் மோதல் தொடர்பாக கவர்னருக்கும், அரசுக்கும் பகிரங்க மோதல் வெடித்தது.
கொல்கத்தா:

மேற்கு வங்காள கவர்னராக ஜெக்தீப் தாங்கர் கடந்த 2019-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். இவருக்கும், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கும் தொடக்கத்தில் இருந்தே மோதல் ஏற்பட்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக, மம்தா பானர்ஜி 3-வது முறையாக ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து அங்கு நடைபெற்ற அரசியல் மோதல் தொடர்பாக கவர்னருக்கும், அரசுக்கும் பகிரங்க மோதல் வெடித்தது.

இந்த நிலையில் ஜெக்தீப் தாங்கர் மாற்றப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த சூழலில் 4 நாள் பயணமாக நேற்று முன்தினம் அவர் டெல்லி சென்றார். அங்கு ஜனாதிபதி ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய மந்திரிகளை சந்தித்து வருகிறார்.

அவரது டெல்லி பயணம் மற்றும் ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து முதல்-மந்திரி மம்தா பானர்ஜியிடம் செய்தியாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் பதிலளிக்கையில், ‘இது குறித்து நான் என்ன கூறுவது? குழந்தையை அமைதிப்படுத்தலாம், ஆனால் பெரிய மனிதரை எப்படி அமைதிப்படுத்துவது? இந்த விவகாரத்தில் மவுனமே சிறந்த பதிலாக இருக்கும்’ எனக்கூறி விரிவாக எதையும் தெரிவிக்க மறுத்து விட்டார்.



கவர்னரை மாற்றுவதற்கான வேலைகள் நடந்து வருவதாக வெளியான செய்திகள் குறித்த கேள்விக்கு, ‘எனக்கு எப்படி தெரியும்? ஒரு கவர்னரை நியமிக்கும்போது, அந்த மாநில அரசுடன் ஆலோசிக்க வேண்டும். ஆனால் இந்த விவகாரத்தில் அது எதுவும் நடக்கவில்லை. கவர்னர் தாங்கரை நீக்குமாறு பிரதமருக்கு 2 அல்லது 3 முறையாவது கடிதம் எழுதியிருப்பேன், ஆனால் எதுவும் நடக்கவில்லை’ என்று தெரிவித்தார்.

அரசியல் சாசன விதிமுறைகளை மீறி வருவதாக கவர்னரை தொடர்ந்து சாடி வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, டெல்லியில் இருந்து மீண்டும் மேற்கு வங்காளத்துக்கு திரும்ப வேண்டாம் என அவருக்கு கோரிக்கை விடுத்து உள்ளது.

இதைப்போல கவர்னர் தாங்கர், பாகுபாட்டுடன் செயல்படுவதாக இடதுசாரிகளும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
Tags:    

Similar News