செய்திகள்
பாதிக்கப்பட்ட குடும்பம் (படம்-என்டிடிவி)

ஆதார் கார்டு, ரேசன் கார்டு இல்லை... 5 குழந்தைகளுடன் பட்டினியால் வாடிய பெண்

Published On 2021-06-17 11:39 GMT   |   Update On 2021-06-17 11:39 GMT
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு சார்பில் முதற்கட்டமாக 5000 ரூபாய் வழங்கப்பட்டதாகவும், ரேசனில் உணவுப் பொருட்களை பெறுவதற்காக அந்தியோதயா கார்டு வழங்கப்பட்டதாகவும் மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
அலிகர்:

கொரோனா பெருந்தொற்று காரணமாக தொழில்கள் முடங்கியதால் ஏராளமான குடும்பங்கள் வருமானம் இன்றி தவிக்கின்றன. அரசு வழங்கும் நிவாரண உதவியை மட்டுமே நம்பி பல குடும்பங்கள் உள்ளன. ஆனால், அந்த உதவியைக்கூட பெற முடியாத அளவிற்கு, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது 5 குழந்தைகளுடன் 2 மாதங்களாக பட்டினியால் வாடி உள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் அலிகர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த குடும்பம் ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு குடும்ப தலைவர் இறந்துவிட்ட நிலையில், அவரது மனைவி மற்றும் 5 பிள்ளைகள் வருமானம் இன்றி கஷ்டப்பட்டனர். மூத்த மகன் கொத்தனார் வேலை செய்துள்ளார். அவருக்கும் ஊரடங்கினால் வேலை கிடைக்காமல் போக, குடும்பம் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தவித்தது. 

அவர்களிடம் அரசு வழங்கும் நிவாரண உதவியை பெறுவதற்கான ரேசன் கார்டோ, ஆதார் கார்டோ இல்லை. இதனால் ரேசன் கடைகளில் உணவுப் பொருட்களை பெற முடியவில்லை. பல நாட்கள் சாப்பிடாததால் பிள்ளைகளின் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நடக்கக்கூட முடியாத நிலையில் இருந்தனர். 

இந்த குடும்பத்தின் நிலை பற்றி அறிந்த ஒரு தொண்டு நிறுவனம், அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளது. மருத்துவ சிகிச்சைக்கு பிறகு அனைவரின் உடல்நிலையும் சீராக உள்ளது. அவர்களுக்கு தேவையான சாப்பாடு மற்றும் பழங்கள் வழங்கப்படுகின்றன. 

அவர்களுக்கு ஆதார் கார்டு வழங்கவும், வங்கி கணக்கு தொடங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. அரசு சார்பில் முதற்கட்டமாக 5000 ரூபாய் வழங்கப்பட்டதாகவும், ரேசனில் உணவுப் பொருட்களை பெறுவதற்காக அந்தியோதயா கார்டு வழங்கப்பட்டதாகவும் மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
Tags:    

Similar News