செய்திகள்
பிரியங்கா காந்தி

சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் அயோத்தி நில ஊழல் விசாரணை - பிரியங்கா கோரிக்கை

Published On 2021-06-16 22:27 GMT   |   Update On 2021-06-16 22:27 GMT
அயோத்தி நில ஊழல் புகார் குறித்து சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரியங்கா கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுடெல்லி:

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த மார்ச் 18ந்தேதி அயோத்தியில் ஒரு நிலத்தை 2 பேர் ரூ.2 கோடிக்கு வாங்கினர். அடுத்த 5 நிமிடங்களில் அதே நிலத்தை ராமர் கோவில் அறக்கட்டளை ரூ.18 கோடியே 50 லட்சத்துக்கு வாங்கியது.

அதாவது ஒரு வினாடியில் நிலத்தின் விலை ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் வீதம் உயர்ந்துள்ளது. இதை யாராவது நம்ப முடியுமா? 2 பத்திர பதிவுகளிலும் சாட்சிகளாக கையெழுத்திட்டவர்கள் ஒரே நபர்கள்தான்.

விலை ஏறி விட்டதாக ராமர் கோவில் அறக்கட்டளை கூறுகிறது. அந்த பகுதியில் நிலத்தின் விலை ரூ.5 கோடிதான் இருக்கும்.

அதிலும், அந்த நிலம் ராமர் கோவில் கட்டுவதற்கான நிலம் அல்ல. ஏனென்றால், அது ராமர் கோவில் வளாகத்தில் இருந்து தூரத்தில் உள்ளது.

ராமர் கோவில் கட்டுவதற்காக நாடு முழுவதும் கோடிக்கணக்கான பக்தர்கள் வழங்கிய பணத்தில் அந்த நிலம் வாங்கப்பட்டுள்ளது. கடவுள் நம்பிக்கையின் பெயரில் ஊழல் தேட வாய்ப்பு தேடுவது, கோடிக்கணக்கானோரின் நம்பிக்கை மீது நடத்தப்பட்ட தாக்குதல், மிகப்பெரிய பாவம்.

ராமர் கோவில் அறக்கட்டளை, பிரதமர் மோடியால் அமைக்கப்பட்டது. அவருக்கு நெருக்கமானவர்கள்தான் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, ராமர் கோவிலின் பெயரில் வசூலிக்கப்பட்ட ஒவ்வொரு ரூபாயும் ஊழலுக்கு அல்லாமல், கோவிலுக்கு பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வது மோடியின் பொறுப்பு.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில்தான் அறக்கட்டளை அமைக்கப்பட்டது. எனவே, இந்த நில ஊழல் குறித்து சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நாட்டு மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News