செய்திகள்
டுவிட்டர்

பாராளுமன்ற நிலைக்குழு முன் ஆஜராக டுவிட்டர் நிறுவனத்திற்கு சம்மன்

Published On 2021-06-15 20:39 GMT   |   Update On 2021-06-15 20:39 GMT
இந்தியாவின் புதிய விதிகளை ஏற்றுக்கொள்ள கூடுதல் கால அவகாசம் வழங்கும்படி மத்திய அரசுக்கு டுவிட்டர் நிறுவனம் கடந்த 7-ம் தேதி கோரிக்கை விடுத்தது.
புதுடெல்லி:

சமூக ஊடகங்களில் இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதாக குற்றச்சாட்டுகள் நீண்டகாலமாக எழுந்து வந்தன.  

இதையடுத்து பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் விதத்தில் மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிதாக தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டம்) விதிகள் 2021-ஐ கொண்டு வந்தது

புதிய விதிகளின் படி, புகார்கள் குறித்து விசாரிக்க இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்பவை போன்ற பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. 

மத்திய அரசின் புதிய விதிகளுக்கு சமூக ஊடகங்கள் இணங்கி நடக்க மே 25-ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டது. கூகுள், பேஸ்புக் சமூக வலைத்தளங்கள் இதற்கு சம்மதம் தெரிவித்து தங்கள் சேவையைத் தொடர்கின்றன. ஆனால் டுவிட்டர் நிறுவனம் மட்டும் புதிய விதிகளை ஏற்றுக்கொள்ள மறுத்து வந்தது.

இதற்கிடையே, துணை ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு, ஆர்.எஸ்.எஸ். தலைவரின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கை குறிக்கும் ‘புளூ டிக்’ வசதியை டுவிட்டர் நிறுவனம் நீக்கியது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் துணை ஜனாதிபதி மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவரின் டுவிட்டர் கணக்குகளுக்கு மீண்டும் ‘புளூ டிக்’ வசதி வழங்கப்பட்டது. 

மேலும், சில பா.ஜ.க. தலைவர்களின் டுவிட்டர் பதிவுகள் ‘திருத்தியமைக்கப்பட்ட தகவல் (manipulated media)’ என சர்ச்சைக்குரிய வகையில் முத்திரையிடப்பட்டது. மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தோடு ‘டூல் கிட்’ முறையை காங்கிரஸ் கையாளுவதாகவும் டுவிட்டர் நிறுவனம் மீது பா.ஜ.க. சார்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. 



அந்த பரபரப்பான சூழ்நிலையில் டெல்லியில் உள்ள டுவிட்டர் நிறுவன அலுவலத்தில் டெல்லி போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இந்த விவகாரத்தால் டுவிட்டர் மற்றும் மத்திய அரசு இடையே மோதல் தீவிரமடைந்தது. 

இதற்கிடையில், புதிய விதிகளை ஏற்கும் படியும், இல்லையேல் சட்டரீதியிலான நடவடிக்கைகளை எதிர்கொள்ளும்படி டுவிட்டர் நிறுவனத்திற்கு கடந்த 5-ம் தேதி மத்திய அரசு இறுதி எச்சரிக்கை விடுத்தது.

இதைத்தொடர்ந்து, இந்தியாவின் புதிய விதிகளை ஏற்க கூடுதல் கால அவகாசம் வழங்கும்படி மத்திய அரசுக்கு டுவிட்டர் நிறுவனம் கடந்த 7-ம் தேதி கோரிக்கை விடுத்தது. புதிய விதிகளை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும், ஆனால் தற்போது கொரோனா பெருந்தொற்று காலம் என்பதால் விதிகளை ஏற்க கூடுதல் கால அவகாசம் தரும்படியும் மத்திய அரசிடம் டுவிட்டர் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்நிலையில், பாராளுமன்ற நிலைக்குழு முன் வரும் 18-ம் தேதி ஆஜராக டுவிட்டர் நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தகவல் மற்றும் தொழில்நுட்ப விவகாரங்களுக்கான பாராளுமன்ற நிலைக்குழு இந்த நோட்டீசை அனுப்பியுள்ளது. 

18-ம் தேதி டுவிட்டர் நிறுவன அதிகாரிகள் பாராளுமன்ற நிலைக்குழு முன் ஆஜராக வேண்டும். மத்திய அரசு தரப்பில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகளும் நிலைக்குழு முன் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

வரும் 18-ம் தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் புதிய தகவல் தொழில்நுட்ப சட்டம், சமூக வலைதளத்தில் தனிநபர் உரிமைகளைப் பாதுகாத்தல், சமூக வலைதளங்களில் பெண்களின் பாதுகாப்பு, டூல் கிட் விவகாரம், திருத்தியமைக்கப்பட்ட தகவல் முத்திரை உள்பட அனைத்து விவகாரங்களும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags:    

Similar News