செய்திகள்
மழை

கேரளாவில் கனமழை நீடிப்பு- 11 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

Published On 2021-06-15 09:37 GMT   |   Update On 2021-06-15 09:37 GMT
பலத்த மழை எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் வருகிற 17-ந்தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் அரபிக்கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக பலத்த மழை பெய்தது. இதனால் மாநிலத்தின் முக்கியமான அணைகள் மற்றும் நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன.

இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி முதல் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. தொடக்கத்தில் குறைவாகவே மழை பெய்தது. இந்த நிலையில் வங்களா விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது.

இதையடுத்து கேரளாவில் நேற்று முன்தினம் முதல் தொடர்ச்சியாக பலத்த மழை பெய்து வருகிறது. மத்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 3 மாவட்டங்களில் இன்றும் (15-ந் தேதி), நாளையும் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இந்த மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் 115.6 மில்லி மீட்டர் முதல் 204.4 மில்லி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

பலத்த மழை முதல் மிக பலத்த மழை அடுத்த சில நாட்கள் வரை தொடர்ந்து பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று திருவனந்தபுரம், கொல்லம் உள்பட 11 மாவட்டங்களுக்கும், நாளை (16-ந் தேதி) பத்தனம்திட்டா, ஆலப்புழா உள்பட 8 மாவட்டங்களுக்கும் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. வருகிற 18-ந் தேதி கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடல் மற்றும் ஆற்று கரையோரம் பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பலத்த மழை எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் வருகிற 17-ந்தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வள்ளம் மற்றும் விசை படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முதல்-மந்திரி பினராயி விஜயன் மாவட்ட கலெக்டர்களுக்கு பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும், நிவாரண முகாம்களையும் தயாராக வைத்திருக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News