செய்திகள்
பிரதமர் மோடி

ஜி-7 உச்சி மாநாட்டில் ஒரே பூமி, ஒரே சுகாதார அணுகுமுறைக்கு மோடி அழைப்பு

Published On 2021-06-14 00:38 GMT   |   Update On 2021-06-14 00:38 GMT
கொரோனா தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் ஜி-7 நாடுகள் மற்றும் பிற உலக நாடுகள் அளித்த ஆதரவு பாராட்டுக்குரியது என பிரதமர் மோடி கூறினார்.
லண்டன்:

இங்கிலாந்தில் கார்ன்வாலில் உள்ள கார்பிஸ் பே கடலோர பகுதியில் நடந்த ‘ஜி-7’ உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் சிறப்பு அழைப்பாளராக காணொலி காட்சி வழியாக கலந்து கொண்டார்.

‘ஆரோக்கியம் - மீண்டும் வலுவாக உருவாக்குதல்’ என்ற தலைப்பில் நடந்த அமர்வில் அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றை திறம்பட கையாள்வதற்கு ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் என்ற அணுகுமுறை வேண்டும். கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்கான காப்புரிமை தற்காலிக விலக்கலுக்கு ‘ஜி-7’ அமைப்பின் தலைவர்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.



எதிர்காலத்தில் வரக்கூடிய தொற்றுநோய்களைத் தடுப்பதற்கு உலகளாவிய ஒற்றுமை, தலைமைத்துவம் வேண்டும். இந்த சவாலை சமாளிப்பதற்கு ஜனநாயக மற்றும் வெளிப்படையான சமூகங்களின் பொறுப்பை வலியுறுத்த விரும்புகிறேன்.

இந்தியாவைப் பொறுத்தமட்டில் கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து ஒட்டுமொத்த சமூகமாக செயல்படுகிறோம். அரசாங்கம், தொழில் துறை மற்றும் சிவில் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் தொற்றுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுகிறோம்.

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிரான தொழில் நுட்பங்களில் காப்புரிமை விலக்குக்காக உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் ஒரு முன்மொழிவை அளித்துள்ளன. இதற்கு ஜி-7 நாடுகள் ஆதரவு தர வேண்டும்.

உலகளாவிய சுகாதார நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகளுக்கு இந்தியாவின் ஆதரவு உண்டு. இன்றைய கூட்டம், ஒட்டுமொத்த உலகுக்கும் ஒரே பூமி, ஒரே சுகாதாரம் என்ற செய்தியை விடுக்க வேண்டும். கொரோனா தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் ஜி-7 நாடுகள் மற்றும் பிற உலக நாடுகள் அளித்த ஆதரவு பாராட்டுக்குரியது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News