செய்திகள்
காண்ட்ராக்டர் மீது குப்பையை கொட்டும் காட்சி

மழை நீர் தேங்கிய சாலையில் காண்ட்ராக்டரை உட்கார வைத்து தண்டனை கொடுத்த எம்எல்ஏ

Published On 2021-06-13 07:09 GMT   |   Update On 2021-06-13 07:09 GMT
மும்பையின் பல்வேறு இடங்களில் மழை நீர் வடியாமல் தேங்கி நிற்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மும்பை:

மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பையின் பல்வேறு இடங்களில் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. பல்வேறு இடங்களில் மழை நீர் வடியாமல் தேங்கி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், சண்டிவாலி தொகுதியின் சிவ சேனா எம்எல்ஏ திலிப் லண்டே, மழை பாதிப்புகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது ஒரு சாலையில் குப்பைகள் அகற்றப்படாமலும், மழை நீர் வடியாமல் தேங்கி நின்றதையும் கவனித்தார். மழைநீர் வடிகால்களை முறையாக சுத்தம் செய்யாமல் இருந்ததால் அடைப்பு ஏற்பட்டிருந்தது. 


இதையடுத்து, அப்பகுதியின் துப்புரவு பணிகளுக்கான காண்ட்ராக்டரை வரவழைத்தார் எம்எல்ஏ. முறையாக குப்பைகளை அகற்றாததால் சாலையில் தண்ணீர் தேங்கியிருப்பதை சுட்டிக் காட்டிய அவர், காண்ட்ராக்டரை கண்டித்ததுடன், தண்ணீர் தேங்கியிருந்த சாலையில் அவரை அமர வைத்தார். அத்துடன், பணியாளர்களிடம் உடனடியாக குப்பைகளை அள்ளி, காண்ட்ராக்டர் மீது போடும்படி கூறினார். அதன்படி துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை அள்ளி, காண்ட்ராக்டர் மீது கொட்டினர். 

காண்ட்ராக்டரை சாலையில் அமர வைத்து தண்டனை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. காண்ட்ராக்டர் தனது வேலையை ஒழுங்காக செய்யாததால் நான் இவ்வாறு செய்தேன் என எம்எல்ஏ திலிப் லண்டே கூறினார்.
Tags:    

Similar News