செய்திகள்
தானேயில் நேற்று பெய்த பலத்த மழையின்போது சாலை ஒன்றில் எடுக்கப்பட்ட படத்தை காணலாம்.

மும்பைக்கு ‘ரெட் அலர்ட்’- இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Published On 2021-06-12 11:24 GMT   |   Update On 2021-06-12 11:24 GMT
ரெட் அலர்ட்டை தொடர்ந்து மக்கள் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என்று மும்பை மாநகராட்சி வலியுறுத்தி உள்ளது.
மும்பை:

மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலும் அதன் சுற்று வட்டாரப்பகுதியிலும் தென்மேற்கு பருவமழை கடந்த புதன்கிழமை தொடங்கியது.

இடைவிடாது பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் ரெயில், சாலை போக்குவரத்து சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. மால்வானியில் கட்டிடம் இடிந்ததில் 8 சிறுவர்- சிறுமிகள் உட்பட 12 பேர் பலியாகி இருந்தனர்.

நேற்று காலையில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் திரும்ப தொடங்கியது. மதியத்துக்கு பிறகு மீண்டும் மழை கொட்டியது. இரவிலும் மழை நீடித்தது.

இந்தநிலையில் மும்பைக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 4 நாட்களுக்கு மும்பை உள்ளிட்ட கொங்கன் மண்டல பகுதிகளில் மிக பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

வடக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. இதனால் மகாராஷ்டிர கடற்கரை பகுதியில் அடுத்த 5 நாட்களுக்கு கனமான மற்றும் மிக அதிக மழை பெய்யும்.

ராய்காட், ரத்னகிரி, மும்பை, தானே பகுதிகளில் பலத்த மழை பெய்யும். மும்பை, தானேக்கு நாளை ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மும்பைவாசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேவை இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம்.

மும்பைக்கு வருகிற 14 மற்றும் 15-ந் தேதிகளில் ‘ஆரஞ்சு அலர்ட்’டும் உள்ளது. இன்று பிற்பகலில் கடலில் அலை 4.3 மீட்டர் உயரத்திற்கு இருக்கும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதற்கிடையே ரெட் அலர்ட்டை தொடர்ந்து மக்கள் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என்று மும்பை மாநகராட்சி வலியுறுத்தி உள்ளது. மாநகராட்சி பள்ளிகளில் தற்காலிக கூடாரங்கள் அமைத்து ஆபத்தான இடங்களில் வசிக்கும் மக்களை தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.



Tags:    

Similar News