செய்திகள்
காங்கிரஸ்

காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் பா.ஜனதா, ஆம் ஆத்மிக்கு தாவ முடிவு

Published On 2021-06-12 10:58 GMT   |   Update On 2021-06-12 10:58 GMT
அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களை குழு அமைத்து தடுத்து நிறுத்தும் முயற்சியில் கட்சி தலைமை ஈடுபட்டுள்ளது.
புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்காவுக்கு நெருக்கமாக இருந்தவர் ஜிதின் பிரசாத். இளம் தலைவரான இவரை உத்தரபிரதேச தேர்தலில் முதல்வர் வேட்பாளராக்க காங்கிரஸ் திட்டமிட்டு இருந்தது. ஆனால் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மீது அதிருப்தியில் இருந்த ஜிதின் பிரசாத் கடந்த சில தினங்களுக்கு முன்பு பா.ஜனதா கட்சியில் இணைந்தார்.

இதேபோல் ராகுலுக்கு நெருக்கமான ராஜஸ்தானை சேர்ந்த காங்கிரஸ் இளம் தலைவர் சச்சின் பைலட் அம்மாநிலத்தில் முதல்-மந்திரியாக விரும்பினார். ஆனால் அசோக் கெலாட்டை ராஜஸ்தான் முதல்வராக காங்கிரஸ் நியமித்தது.

இதையடுத்து சச்சின் பைலட் கடந்த வருடம் 18 எம்.எல்.ஏ.க்களுடன் போர்க்கொடி உயர்த்தினார். அவர் பா.ஜனதாவுக்கு செல்வதாக அப்போது பேச்சு எழுந்தது. பின்னர் அவரது வேறு சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறி காங்கிரஸ் தலைமை அவரை சமாதானப்படுத்தியது.



இந்த நிலையில், சச்சின் பைலட் தனக்கு கட்சி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என கூறி தலைமைக்கு கடிதம் எழுதி இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த கடிதத்தில் தனது ஆதரவாளர்களை அமைச்சரவையில் சேர்க்க வலியுறுத்தி இருப்பதாக தெரிகிறது. அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் சச்சின் பைலட் பா.ஜனதாவுக்கு தாவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


பஞ்சாப்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவும் காங்கிரஸ் மீது அதிருப்தியில் உள்ளார். பா.ஜனதாவில் இருந்த முக்கிய தலைவரான இவர் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கு எதிராக விமர்சனம் செய்து வருகிறார்.

இந்த பிரச்சினை முடியாவிட்டால் அவர் பஞ்சாப்பின் எதிர்கட்சியான ஆம் ஆத்மிக்கு தாவும் சூழ்நிலை ஏற்படுகிறது.

இந்த நிலையில் அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களை குழு அமைத்து தடுத்து நிறுத்தும் முயற்சியில் கட்சி தலைமை ஈடுபட்டுள்ளது. இதற்காக 2 குழுவினர் நியமிக்கப்பட்டனர். அவர்கள் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் அதிருப்தி தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

பின்னர் அந்த அறிக்கைகளை கட்சி தலைமையிடம் சமர்ப்பித்து உள்ளனர். அந்த பரிந்துரைகளை செயல்படுத்த சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்களுக்கு காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தி உள்ளது.

Tags:    

Similar News