செய்திகள்
சிவசேனா

இளம் தலைவர்கள் பாஜகவிற்கு செல்வது நல்லதல்ல: சிவசேனா விமர்சனம்

Published On 2021-06-12 02:33 GMT   |   Update On 2021-06-12 02:33 GMT
பிரசாதா பாராளுமன்ற, சட்டசபை தேர்தல்களில் தோல்வி அடைந்து கொண்டே இருந்தார். அவர் கட்சியில் சேர்ந்ததை பா.ஜனதா கொண்டாடுகிறது. இது வேடிக்கையாக உள்ளது.
மும்பை :

உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தங்களை தயார்படுத்தி வருகின்றன. இந்தநிலையில் உத்தரப்பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவரான ஜிதின் பிரசாதா பா.ஜனதாவில் இணைந்து உள்ளார். ஜிதின் பிரசாதா பா.ஜனதாவில் இணைந்து இருப்பதை சிவசேனா விமா்சித்து உள்ளது.

இதுகுறித்து சாம்னாவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஜிதின் பிரசாதா, ஜோதிர் ஆதித்ய சிந்தியா, சச்சின் பைலட் ஆகியோர் இளம் தலைவர்கள். அவர்களிடம் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ராஜீவ் சதாவ், அகமது பட்டேல் ஆகியோரின் மறைவுக்கு பிறகு ஏற்கனவே காங்கிரசில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இளம் தலைவர்கள் பா.ஜனதாவிற்கு செல்வது நல்லதல்ல. உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் தோல்வியை தழுவிய பிரசாதா, பா.ஜனதாவில் இணைந்து உள்ளார். பிரசாதாவின் குடும்பத்தினர் காங்கிரஸ் விசுவாசிகள். மன்மோகன்சிங் மந்திரி சபையில் கேபினட் மந்திரியாக பிரசாதா இருந்து உள்ளார். ஆனாலும் அவர் நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்களில் தோல்வி அடைந்து கொண்டே இருந்தார். அவர் கட்சியில் சேர்ந்ததை பா.ஜனதா கொண்டாடுகிறது. இது வேடிக்கையாக உள்ளது.

உத்தரபிரதேசத்தில் உள்ள சாதி அரசியல் தான் இதற்கு பின்னால் உள்ளது. பிராமணர்களின் வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு அவர் பா.ஜனதாவில் இணைக்கப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு பிராமணர்களின் வாக்குவங்கி இருந்தால் அது ஏன் காங்கிரசுக்கு விழவில்லை?. இதுவரை உ.பி.யில் பா.ஜனதாவுக்கு எந்த முகமும் தேவைப்படவில்லை. நரேந்திர மோடி தான் எல்லாமுகமாக இருந்தார். ராமர் கோவில் அல்லது இந்துத்துவா தான் வெற்றி வாக்குகளாக இருந்தன. தற்போது அங்கு நிலைமை மோசமாகி உள்ளது. எனவே அவர்களுக்கு பிரசாதாவின் ஆதரவு தேவைப்பட்டு உள்ளது.

ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் ஏன் கட்சி தாவுகிறார்கள் என்பது முக்கிய பிரச்சினை ஆகும். பஞ்சாபிலும் காங்கிரசில் அதிருப்தியாளர்கள் உள்ளனர். அதிருப்தியாளர்கள் பிரச்சினை காங்கிரசில் மட்டுமில்லை. கேரளா, அசாமில் வெற்றி பெற கூடிய இடத்தில் இருந்தும் காங்கிரஸ் வெற்றியை பெறமுடியவில்லை. புதுச்சேரியிலும் தோல்வி அடைந்தார்கள். ஆனாலும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசனை காங்கிரசில் நடக்கவில்லை. மராட்டியம், கேரளா, கர்நாடகா தவிர மற்ற இடங்களில் காங்கிரஸ் தங்கள் இடத்தை தக்க வைக்கவே போராடி வருகிறது. இந்த அரசியல் சீரற்ற நிலை ஜனநாயகத்துக்கு தீங்கு ஏற்படுத்தும்.

காங்கிரஸ் சுதந்திரத்திற்கு முன்னும், பின்னும் பல வேலைகளை செய்து உள்ளது. நாட்டை உருவாக்க அந்த கட்சி பங்களித்து உள்ளது. இன்றும் நேரு, காந்தி ஆகியோர் நாட்டின் அடையாளமாக இருப்பதை மறுக்க முடியாது. அடிமட்ட அளவில் காங்கிரசுக்கு பலமான செல்வாக்கு உள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா அவரது பொறுப்பை செய்துவிட்டார். தற்போது ராகுல் காந்தி வலுவான அணியை உருவாக்க வேண்டும். அதுவே கட்சிக்கு முன் உள்ள சவால்களுக்கு பதிலாக அமையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News