செய்திகள்
டாக்டர் வி.கே.பால்

கோவேக்சினுக்கு அமெரிக்கா அனுமதி மறுத்ததால் இந்திய தடுப்பூசி திட்டத்துக்கு பாதிப்பு இல்லை - மத்திய அரசு

Published On 2021-06-11 19:47 GMT   |   Update On 2021-06-11 19:47 GMT
பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டு ஒப்புதலை அளிக்க அமெரிக்கா மறுத்துவிட்டது.
புதுடெல்லி:

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் தடுப்பூசி இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளின் அவசரகால தேவைக்கு அனுமதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியை அமெரிக்கவில் தயாரித்து வினியோகம் செய்ய ஒகுஜென் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த நிறுவனம் சார்பில் கோவேக்சின் தடுப்பூசியை அமெரிக்காவில் அவசரகால தேவைக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதி கோரியிருந்தது.

இதற்கிடையே, கோவேக்சின் தடுப்பூசியை பயன்படுத்த ஒகுஜென் நிறுவனம் அளித்த கோரிக்கையை அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு நிராகரித்துள்ளது. மேலும், கோவேக்சின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு விண்ணப்பிக்க கூடுதல் பரிசோதனை முடிவுகளை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுபற்றி ஒகுஜென் நிறுவனம் கருத்து தெரிவிக்கையில், “இனி நாங்கள் கோவேக்சின் தடுப்பூசியின் அவசர பயன்பாட்டு அங்கீகாரத்தைக் கோர மாட்டோம்” என கூறிவிட்டது.



பாரத் பயோடெக் நிறுவனம் கூறுகையில், “கொரோனா தடுப்பூசிகள் எதற்கும் அவசர பயன்பாட்டு அங்கீகாரம் வழங்கப்பட மாட்டாது என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் அறிவித்து விட்டது. எல்லா விண்ணப்பங்களும் பி.எல்.ஏ. என்று அழைக்கப்படுகிற நிரந்தர உரிம அங்கீகாரத்துக்குத்தான் விண்ணப்பிக்க வேண்டும். இதுதான் தடுப்பூசிக்கான நிலையான செயல்முறை. கூடுதலான மருத்துவ பரிசோதனை தரவுகள் தேவைப்படுகிறது” என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் சார்பில் நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அவர் அதற்கு பதில் அளித்து கூறியதாவது:

ஒவ்வொரு நாட்டிலும் அதற்கென சொந்த ஒழுங்குமுறை அமைப்பு உள்ளது. அங்கீகாரம் அளிப்பதில் சில அம்சங்கள் பொதுவாக இருக்கலாம். நம் நாட்டின் ஒழுங்குமுறையும் இதுபோன்ற முடிவுகளை எடுக்கிறது. அறிவியல் கட்டமைப்பு ஒன்றாக இருந்தாலும், நுணுக்கம் மாறுகிறது.

அமெரிக்கா போன்ற நாடுகளில் அறிவியல் கட்டமைப்பு வலுவாக உள்ளது. நம்மிடம் உற்பத்தி வலுவாக இருக்கிறது. நாம் நன்றாக செயல்படுகிறோம். நாம் அவர்களது முடிவை மதிக்கிறோம். அதே நேரத்தில் இந்த முடிவு நமது தடுப்பூசி திட்டத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என தெரிவித்தார்.
Tags:    

Similar News