செய்திகள்
சச்சின் பைலட்

ஜிதின் பிரசாத்தை தொடர்ந்து சச்சின் பைலட்டும் பா.ஜனதாவில் சேர திட்டம்?

Published On 2021-06-10 06:21 GMT   |   Update On 2021-06-10 06:21 GMT
ஜிதின் பிரசாத்தின் தந்தை ஜிதேந்திரபிரசாத் காங்கிரசில் மூத்த தலைவராக இருந்த போது சோனியாவுக்கு எதிராக செயல்பட்டார். கட்சி தலைவர் பதவிக்கு சோனியாவையே எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
புதுடெல்லி:

உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும், ராகுல்காந்தியின் நெருங்கிய நண்பருமாக இருந்தவருமான ஜிதின் பிரசாத் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்துள்ளார். இது காங்கிரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இன்னும் 2 வருடத்தில் உத்தரபிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கு எப்படியாவது அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் பிரியங்கா காந்தி உத்தரபிரதேச பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நேரத்தில் மூத்த தலைவர் ஜிதின் பிரசாத் காங்கிரசில் இருந்து வெளியேறி இருக்கிறார். இது உத்தரபிரதேசத்தில் காங்கிரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.



ராகுல்காந்தியின் முக்கிய தளபதிகளாக செயல்பட்டவர்களில் ஜிதின் பிரசாத்தும் ஒருவர். ஏற்கனவே இதே போல தளபதி அந்தஸ்தில் இருந்த ஜோதிர் ஆதித்யா பா.ஜனதாவில் சேர்ந்து விட்டார். மற்றொரு தளபதியான ராஜஸ்தானை சேர்ந்த சச்சின் பைலட் காங்கிரசில் இருந்து வெளியேறுவதற்கு கலகத்தை ஏற்படுத்தினார். பின்னர் காங்கிரசிலேயே இருந்துவிட்டார்.

இந்த நிலையில் தான் ஜிதின் பிரசாத் பா.ஜனதாவில் சேர்ந்து இருக்கிறார். அடுத்து சச்சின் பைலட்டும் பா.ஜனதாவுக்கு செல்லலாம் என்று பேச்சு அடிபடுகிறது. 10 மாதங்களுக்கு முன்பு அவர் கட்சியை விட்டு வெளியேற தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களோடு சேர்ந்து பிரச்சனையை உருவாக்கினார். அவரை சமரசப்படுத்தி கட்சியில் தக்கவைத்தனர்.

அப்போது அவருக்கு பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது. ஆதரவாளர்கள் பலருக்கு மந்திரி பதவி தருவதாகவும் தெரிவித்தனர். ஆனால் இதில் எதையுமே நிறைவேற்றவில்லை. எனவே சச்சின் பைலட் சமீபத்தில் தனது அதிருப்தியை வெளியிட்டார்.

இதனால் ஜிதின் பிரசாத்தை தொடர்ந்து சச்சின் பைலட்டும் பா.ஜனதாவுக்கு சென்று விடுவார் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.

ஜிதின் பிரசாத், கட்சி மாறியது தொடர்பாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுப்ரியா கூறியதாவது:-

ஜிதின் பிரசாத்தின் தந்தை ஜிதேந்திரபிரசாத் காங்கிரசில் மூத்த தலைவராக இருந்த போது சோனியாவுக்கு எதிராக செயல்பட்டார். கட்சி தலைவர் பதவிக்கு சோனியாவையே எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

அவர் இறந்து விட்டதையடுத்து மகன் ஜிதின் பிரசாத்துக்கு எம்.பி. பதவியும், மத்திய மந்திரி பதவிகளும் வழங்கப்பட்டது. ஆனால் கட்சிக்கு விசுவாசம் காட்டாமல் தந்தை வழியிலேயே மகனும் செயல்பட்டுள்ளார். அவர் தனது தனிப்பட்ட அரசியல் ஆதாயத்துக்காக பா.ஜனதாவுக்கு சென்றுள்ளார். அவர் நீண்டகாலமாகவே காங்கிரசில் சரியான செயல்பாடு இல்லாமல் இருந்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News