செய்திகள்
தண்ணீரில் மூழ்கிய தண்டவாளம்

தென்மேற்கு பருவமழை தொடங்கியது- முதல் நாளிலேயே மும்பையை மிரள வைத்த கனமழை

Published On 2021-06-09 10:27 GMT   |   Update On 2021-06-09 10:27 GMT
அரபிக்கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்றும் 4 மீட்டர் அளவுக்கு அலைகள் எழும்பலாம் என்றும் மாநகராட்சி எச்சரித்துள்ளது.
மும்பை:

மகாராஷ்டிராவில் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கியுள்ளது. முதல் நாளிலேயே மும்பை, தானே மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே கனமழை பெய்கிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. முக்கிய சாலைகள், தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. ஒரு சில சுரங்கப்பாதைகள் மூடப்பட்டன.

கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், புறநகர் ரெயில் சேவை உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. ரெயில்கள் நிறுத்தப்பட்டன. மழை நீர் சூழ்ந்த பகுதிகளில் பெஸ்ட் பேருந்துகள் இயக்கப்படவில்லை. 



கனமழை பெய்து வரும் நிலையில், மாநகராட்சியின் பேரிடர் மேலாண்மை ஆணைய கட்டுப்பாட்டு அறையை முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் அதிகாரிகள் இன்று பார்வையிட்டனர். 

மும்பை மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தின் பல பகுதிகளில் கன மழை மற்றும், அதீத கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மும்பைக்கு இன்று அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 4-5 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரபிக்கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்றும் 4 மீட்டர் அளவுக்கு அலைகள் எழும்பலாம் என்றும் மாநகராட்சி எச்சரித்துள்ளது.

மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 77.4 மிமீ அளவு மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சான்டா குரூஸ் பகுதியில் 59.6 மிமீ மழை பதிவாகியுள்ளது. 
Tags:    

Similar News