செய்திகள்
பார்பரா ஜபாரிகா

மெகுல் சோக்சியின் உண்மையான பெயர்கூட எனக்கு தெரியாது -தோழி பார்பரா ஜபாரிகா பேட்டி

Published On 2021-06-09 07:27 GMT   |   Update On 2021-06-09 10:18 GMT
நான் சோக்சியின் காதலி இல்லை என்று ஒரு சில நேர்காணல்களில் தெளிவுபடுத்தி உள்ளதாக பார்பரா கூறி உள்ளார்.
புதுடெல்லி: 

வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்டு தப்பிச் சென்ற வைர வியாபாரி மெகுல் சோக்சி, வட அமெரிக்க நாடான ஆன்டிகுவா மற்றும் பார்புடாவில் தஞ்சமடைந்தார். அவரை இந்தியாவிற்கு கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டிருந்த நிலையில், அங்கிருந்து கடந்த மாதம், திடீரென மாயமானார். 

பின்னர் ஆன்டிகுவா அருகே உள்ள மற்றொரு தீவு நாடான டொமினிகாவில் சோக்சி கைது செய்யப்பட்டார். சட்டவிரோதமாக டொமினிகாவிற்குள் நுழைந்ததால் கைது செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து வட அமெரிக்க நாடான கியூபாவுக்கு தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. 


ஆனால் மெகுல் சோக்சியை சிலர் கடத்தியதாக, சோக்சியின் வழக்கறிஞர் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக டொமினிக்கா போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். ஜாலி துறைமுகம் பகுதியில் இருந்து அவர் கடத்தப்பட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது.



போலீசில் சோக்சி அளித்த புகாரில், தன் தோழி பார்பரா ஜபாரிகாவின் வீட்டுக்குச் சென்றபோது 10 பேர் தன்னை தாக்கி கடத்திச் சென்றதாக கூறி உள்ளார். 

இது குறித்து பார்பரா ஜபாரிகா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 

சோக்சி மாயமான விவகாரத்தில், அவரது வழக்கறிஞரும், குடும்பத்தினரும் என் பெயரை தேவையின்றி இழுக்கின்றனர். சோக்சி கடத்தப்பட்டதில் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை. ஜாலி துறைமுக பகுதி பாதுகாப்பான இடத்தில் உள்ளது என்பதும், அங்கிருந்து யாரையும் கடத்த முடியாது என்பது அப்பகுதியை அறிந்தவர்களுக்கு தெரியும். 

நான் அவரின் காதலி இல்லை என்று ஒரு சில நேர்காணல்களில் தெளிவுபடுத்தி உள்ளேன். எனக்கென்று சொந்த தொழில் மற்றும் வருமானம் இருக்கிறது. அவரது பணம், ஆதரவு, போலி நகை போன்ற எதுவும் எனக்கு தேவையில்லை

என்னிடம் அவர் இதற்கு முன்பு பேசும்போது, ஆன்டிகுவாவில் இருந்து தப்பிச் செல்வதுபோன்ற எந்த வார்த்தையையும் பயன்படுத்தவில்லை. ஒருவேளை அடுத்த முறை கியூபாவில் சந்திக்கலாம் என கூறினார். எனவே, கியூபா தான் அவர் சென்றடையும் இடமாக இருந்திருக்கலாம். 

நான் இந்திய செய்திகளை படிப்பதில்லை. கடந்த வாரம் வரை அவரது உண்மையான பெயர் மற்றும் பின்னணியைப் பற்றி எனக்கு தெரியாது. என்னிடம் ராஜ் என்ற பெயருடன்தான் அறிமுகமாகி பழகினார். இதேபோல் ஆன்டிகுவாவில் உள்ள பெரும்பாலான மக்களுக்கும் அவருடைய பெயர் அல்லது பின்னணி தெரிந்திருக்கும் என்று நினைக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News