செய்திகள்
டெல்லிக்கு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள்

டெல்லியில் கூடுதல் தளர்வுகள்- மெட்ரோ ரெயில்கள் இயங்க தொடங்கின

Published On 2021-06-07 06:25 GMT   |   Update On 2021-06-07 06:25 GMT
பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும்படி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. குணமடைவோரின் எண்ணிக்கையும் உயர்கிறது. பாதிப்பு குறைந்ததையடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படுகின்றன. 

டெல்லியிலும் பாதிப்பு வெகுவாகக் குறைந்ததையடுத்து ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி இன்று முதல் மெட்ரோ ரெயில்கள் மீண்டும் இயங்க தொடங்கின. ஆனால் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. நின்று பயணம் செய்ய அனுமதி இல்லை. 

தனியாக செயல்படும் கடைகள், மால்கள், சந்தைகள், அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம். அரசு அலுவலகங்களில் குரூப்-ஏ ஊழியர்கள் 100 சதவீதமும், குரூப்-பி ஊழியர்கள் 50 சதவீதமும் பணியாற்ற அனுமதிக்கப்படுகிறது. அவசர சேவைகள் வழங்கும் அரசு அலுவலகங்கள் 100 சதவீத ஊழியர்களுடன் செயல்படுகின்றன.

ஒற்றைப்படை, இரட்டைப்படை என்ற வரிசையில் கடைகளை திறக்கவேண்டும். காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும்படி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சொந்த ஊர்களுக்கு சென்றிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் டெல்லிக்கு திரும்பத் தொடங்கி உள்ளனர். 
Tags:    

Similar News