செய்திகள்
கொல்கத்தா இஸ்லாமியா மருத்துவமனை

இங்கு அவங்களுக்கு மட்டும் தான் சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறி வைரலாகும் தகவல்

Published On 2021-06-07 05:27 GMT   |   Update On 2021-06-07 05:27 GMT
கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.


இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று மக்களை வாட்டிவதைக்கிறது. நாடு முழுக்க மருத்துவமனை மற்றும் மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு காரணமாக பெரும் சிக்கலான சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில், கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனை சமூக வலைதள சர்ச்சையில் சிக்கியுள்ளது.

திரினாமுல் காங்கிரஸ் தலைவர் மற்றும் கொல்கத்தா மேயர் இணைந்து புதுப்பிக்கப்பட்ட மருத்துவமனை ஒன்றை திறந்து வைக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் பதிவுகளில் புது மருத்துவமனையில் முஸ்லீம் மதத்தினருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், புதுப்பிக்கப்பட்ட மருத்துவமனை 1926 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. எனினும், கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த மருத்துவமனை பயன்பாடற்ற நிலையில், மூடப்பட்டு இருந்தது. சமீபத்தில், இந்த மருத்துவமனை கொரோனா நோயாளிகளுக்காக புதுப்பிக்கப்பட்டது. இதில் மதம் மற்றும் சாதி பாகுபாடின்றி அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.



புதுப்பிக்கப்பட்ட மருத்துவமனை மே 30 ஆம் தேதி திறக்கப்பட்டது. இதில் ஐசியு வசதி, படுக்கை வசதி உள்ளிட்டவை உள்ளது. இங்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும். கொரோனாவுக்கு எதிரான போரில் இந்த மருத்துவமனையும் செயல்படும் என இதனை திறந்து வைத்த திரினாமுல் காங்கிரஸ் தலைவர் மற்றும் கொல்கத்தா மேயர் தங்களின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

அந்த வகையில் கொல்கத்தாவில் திறக்கப்பட்டுள்ள புது மருத்துவமனையில் முஸ்லீம் மதத்தினருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும் என கூறி வைரலான தகவலில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News