செய்திகள்
காங்கிரஸ்

காங்கிரஸ் உள்கட்சி மோதலே தேர்தல் தோல்விக்கு காரணம்- சோனியாவிடம் ஆய்வு குழு அறிக்கை

Published On 2021-06-03 08:53 GMT   |   Update On 2021-06-03 08:53 GMT
ஓட்டுப்பதிவுக்கு முன்பு அனைத்து மாநிலங்களிலும் காங்கிரசில் உள்கட்சி மோதல் ஏற்பட்டதால் தேர்தல் வெற்றியை பாதித்தது.
புதுடெல்லி:

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது.

இந்த தோல்வி குறித்து ஆராய மகாராஷ்டிரா முன்னாள் முதல்-மந்திரி அசோக்சவான் தலைமையில் மணீஷ் திவாரி, வின்சென்ட் பாலா, சல்மான் குர்ஷித், ஜோதிமணி ஆகியோர் கொண்ட ஆய்வு குழுவை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அமைத்திருந்தார்.

அந்த குழுவினர் 4 மாநிலங்களில்   காங்கிரஸ்   தோல்வியை சந்தித்தது ஏன் என்பது தொடர்பான அறிக்கையை சோனியாவிடம் வழங்கினார்கள். இதில் புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களில் காங்கிரசின் உள்கட்சி மோதல்கள், வேட்பாளர் தேர்வில் ஏற்பட்ட தவறுகள், சரியான கூட்டணியை தேர்ந்தெடுக்காததே தேர்தல் தோல் விக்கு காரணம் என்று குற்றம் சாட்டினார்கள்.

ஓட்டுப்பதிவுக்கு முன்பு அனைத்து மாநிலங்களிலும் காங்கிரசில் உள்கட்சி மோதல் ஏற்பட்டதால் தேர்தல் வெற்றியை பாதித்தது.

கேரளாவில் உம்மன்சாண்டி மற்றும் ரமேஷ் சென்னிதலா ஆதரவாளர்களிடையே உள்ள கருத்து வேறுபாடு அங்கு காங்கிரஸ் தோல்வியை சந்திக்க காரணமாக அமைந்தது. மேலும் அங்கு புதிய வேட்பாளர்களையும் நிறுத்தவில்லை. இதனால் அங்கு கம்யூனிஸ்டு கட்சி 2-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

அசாமில் ஏ.ஐ.யு.டி.எப். கட்சியுடனான கூட்டணியே தேர்தல் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

காங்கிரஸ் பொறுப்பாளர் ஜிதேந்திரசிங் கூட்டணி வி‌ஷயத்திலும், பிரசாரத்திலும் மாநில காங்கிரஸ் தலைமையை தவிர்த்ததால் அங்கு காங்கிரஸ் தோல்வியை தழுவியது.

மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா கட்சிக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இருந்த வாக்காளர்களிடையே இருந்த தாக்கம் காங்கிரஸ் வெற்றியை பாதித்தது என்று ஆய்வுக்குழுவினர் அறிக்கையில் கூறி இருந்தனர்.

Tags:    

Similar News