செய்திகள்
தடுப்பூசி

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது தடுப்பூசி... 30 கோடி டோஸ் வாங்க முன்பதிவு செய்தது அரசு

Published On 2021-06-03 06:37 GMT   |   Update On 2021-06-03 06:37 GMT
உள்நாட்டு நிறுவனமான பயோலாஜிக்கல்-இ நிறுவனத்தின் தடுப்பூசி மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் ஆக்ஸ்ஃபோர்டு ஆஸ்ட்ராஜெனேகா தயாரித்த கோவிஷீல்டு தடுப்புசி மற்றும் பாரத் பயோடெக் என்கிற இந்திய நிறுவனம் தயாரித்த கோவாக்சின் என இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் குறைந்த அளவிலேயே சப்ளை செய்யப்படுகிறது. இந்த தடுப்பூசியும் விரைவில் பரவலாக மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

இந்நிலையில், ஐதராபாத்தைச் சேர்ந்த பயோலாஜிக்கல்-இ என்ற நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி ஓரிரு மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மருந்து தற்போது மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளது. 

இந்நிலையில், இந்தியாவில் தடுப்பூசி பற்றாக்குறையை போக்கும் வகையில், பயோலாஜிக்கல்-இ நிறுவன தடுப்பூசி மருந்தை 30 கோடி டோஸ் அளவிற்கு கொள்முதல் செய்ய மத்திய அரசு முன்பதிவு செய்துள்ளது. இதற்காக அட்வான்சாக 1500 கோடி ரூபாயை மத்திய சுகாதார அமைச்சகம் செலுத்த உள்ளது. ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை இந்த தடுப்பூசி மருந்துகள் தயாரிக்கப்பட்டு சேமிக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது.

மார்ச்-ஏப்ரல் மாதங்களில் கொரோனா இரண்டாவது அலையால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டபோது, மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டதால், தடுப்பூசி ஏற்றுமதியை தற்காலிகமாக மத்திய அரசு நிறுத்தி வைத்ததுடன், அதிக தடுப்பூசிகளை வாங்கும் நிலை ஏற்பட்டது. எனவே, தடுப்பூசி பற்றாக்குறையை போக்குவதற்காக உள்நாட்டு தயாரிப்பை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் தினமும் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தும் அளவிற்கு போதுமான அளவு தடுப்பூசி டோஸ்களை பெற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News