செய்திகள்
கோப்புப்படம்

கொரோனா தடுப்பூசிகளின் முழு விவரத்தையும் தாக்கல் செய்ய வேண்டும் - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Published On 2021-06-02 23:50 GMT   |   Update On 2021-06-02 23:50 GMT
கொரோனா பேரிடர் காலத்தில் அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் வினியோகம், சேவைகள் தொடர்பாக தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது.
புதுடெல்லி:

இதுவரை வாங்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளின் முழு விவரத்தையும் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பேரிடர் காலத்தில் அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் வினியோகம், சேவைகள் தொடர்பாக தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வர ராவ், எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் திங்கட்கிழமை அளித்த தீர்ப்பின் விவரம் நேற்று வெளியாகியுள்ளது, தீர்ப்பில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளுக்கு இடையே இணையப் பயன்பாட்டில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன.கோவின் இணையதளத்தில் பதிவு செய்ய நண்பர்களையோ, தொண்டு நிறுவனங்களையோ பெரும்பாலான மக்கள் சார்ந்து இருப்பது சாத்தியமில்லை. இணையத்தை பயன்படுத்த தெரிந்தவர்களுக்கே கோவின் தளத்தில் பதிவு செய்ய சிரமம் ஏற்படுகிறது.கிராமங்களில் உள்ள பொதுச்சேவை மையங்களிலும் கோவின் இணையதளத்தில் பதிவு செய்ய கூட்டம் சேரும்.

18-44 வயதினருக்கு சில தடுப்பூசி மையங்களில் நேரடி பதிவு முறை இல்லாமல் இருக்கும். இதற்கு தீர்வு காண ஒவ்வொரு தடுப்பூசி மையத்திலும் அல்லது குறிப்பிட்ட தடுப்பூசி மையங்களில் நேரடி பதிவு முறையை அறிமுகப்படுத்தலாம்.

கோவின் செயலி, ஆரோக்ய சேது செயலி போன்றவற்றை பிராந்திய மொழிகளிலும் இயங்கச் செய்ய வேண்டும். இவற்றை மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும்.



மேற்கண்டவை தொடர்பாக மத்திய அரசு விரிவான பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.

இதுவரை கொரோனா முதலாவது மற்றும் 2-வது தவணை செலுத்தப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை, கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் சதவீதம் ஆகியவை தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்.

இதுநாள் வரை மத்திய அரசு வாங்கிய கொரோனா தடுப்பூசிகள் (கோவேக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி), தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்ட தேதி, தேதிவாரியான எண்ணிக்கை, தடுப்பூசிகள் வினியோகத்துக்கு உத்தேசிக்கப்பட்டுள்ள தேதி ஆகியவை குறித்தும் மத்திய அரசு பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.

எஞ்சியுள்ள மக்களுக்கு எப்போது, எப்படி தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்பதற்கான திட்ட வரையறையையும் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும்.

கொரோனா தடுப்பூசி கொள்முதலுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்துள்ள ரூ.35 ஆயிரம் கோடியை எவ்வாறு செலவு செய்துள்ளது என்று மத்திய அரசு விளக்க வேண்டும். 18 முதல் 44 வயதினருக்கு தடுப்பூசி போட இந்த நிதியை ஏன் பயன்படுத்தக் கூடாது?

கருப்பு பூஞ்சை மருந்துகளை இருப்பில் வைப்பதை அல்லது கிடைப்பதை உறுதி செய்ய எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

மத்திய அரசு பிரமாணபத்திரத்தை தாக்கல் செய்யும்போது, கொரோனா தடுப்பூசி திட்டத்தை அதிகரிக்க செய்ய எண்ணியுள்ள யோசனைகள் குறித்த ஆவணங்களை 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

மத்திய அரசு கடந்த மே 9-ந்தேதி தாக்கல் செய்த பிரமாணபத்திரத்தில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கொரோனா தடுப்பூசியை இலவசமாக செலுத்துவதாக சொல்லப்பட்டுள்ளது. இந்த நிலைப்பாட்டை ஒவ்வொரு மாநில, யூனியன் பிரதேச அரசும் உறுதி செய்வது அல்லது மறுப்பது அவசியம்.

மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்த கொள்கை அளவில் தீர்மானிக்கப்பட்டு இருந்தால், அதுதொடர்பான ஆவணத்தை பிரமாணபத்திரத்துடன் சேர்த்து, மாநிலங்களில் பின்பற்றப்பட்டு வரும் தடுப்பூசி திட்டம் தொடர்பான நிலைப்பாட்டை 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உத்தரவிடுகிறோம்.

வழக்கு விசாரணையை ஜூன் 30-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம் என அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News